படித்ததும் பாதித்ததும் 2

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 சேவை இருக்கிறது. இதர ஆம்புலன்ஸ் சேவைகளிலிருந்து இது வேறுபட்டது. காரணம், மருத்துவமனை வரை செல்லும் முன்பாகவே முதல் உதவி கொடுத்துவிடும் வசதியும் இதில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால் உயிர் அபாயம் உள்ள நிலையில் மட்டுமே உதவ 108 உள்ளது. இதர நெருக்கடிகளுக்கு பயன்படாது.


இந்த வாரம் என் தோழி ஒருவர் சேத்துப்பட்டு ரயிலடியிலிருந்து தொலைபேசினார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன் மலத்தின் மீதே புரண்டபடி கிடக்கும் நிலையில் இருப்பதாகச் சொன்னார். 108ஐ தொடர்பு கொள்ளச் சொன்னேன். அப்போதுதான் அவர்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு வருவதில்லை என்பது தெரிந்தது.

அடுத்து என் தோழி பேன்யன் தொண்டு நிறுவனத்துக்கு தொலைபேசினார். பேன்யன் தெருவில் இருக்கும் அநாதையான மன நலம் குன்றியவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு. அதை நடத்துபவர்கள் மீடியாவில் பல முறை புகழப்பட்டு பல்வேறு விருதுகள் பெற்றிருக்கக்கூடியவர்கள்.

என் தோழிக்கு போனில் கிடைத்த பதில் இது: இப்போதெல்லாம் நாங்கள் புதிதாக யாரையும் எடுத்துக் கொள்வதில்லை.

சரி. வேறு ஏதாவது அமைப்புக்கு உங்களால் தகவல் சொல்ல முடியுமா?

அதெல்லாம் எங்களால் முடியாது. நீங்களே போலீசுக்குப் போய் சொல்லுங்கள்.

இப்போது என்ன செய்வது ?சேத்துப்பட்டு ரயிலடியில் ஒரு பிணம் கிடப்பதாகச் சொன்னால்தான் போலீஸ் வரும். அல்லது ஒருவர் குடித்துவிட்டு ரகளை செய்வதாகச் சொன்னால் வரும். அல்லது அங்கே குண்டு வைத்திருப்பதாகச் சொன்னால் வரும். இதுதான் நம் சமூக நிலை.

என் தோழி தினசரி தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்பாதையில் பயணம் செய்கிறார். ஏன் சேத்துப்பட்டு ரயிலடியில் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக, மன நலம் குன்றியவர்கள் காணப்படுகிறார்கள் என்று அவருக்கு புதிராக இருக்கிறது. அதுவும் நகர முடியாத நிலையில் இருப்பவர்கள், சுயபிரக்ஞயற்றவர்கள் எல்லாம் எப்படி சரியாக சேத்துப்பட்டு ரயிலடியைக் கண்டுபிடித்து வந்து சேருகிறார்கள் என்பது பெரும் புதிர். தங்களால் வைத்துப் பராமரிக்க முடியாதவர்களை, சமாளிக்க முடியாதவர்களை யாரேனும் இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டுப்போய் விடுகிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

No comments:

Post a Comment

Popular Posts