படித்ததும் பாதித்ததும் 1

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)
மும்பையில் சென்ற வருடம் நவம்பரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த புல்லட் தடுப்புக் கவசம் அவரைக் காப்பாற்றவில்லை.

அவரைக் கொன்ற எட்டு புல்லட்டுகளில் மூன்று வலது நெஞ்சில் கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தவை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியிருக்கிறது. கர்காரே அணிந்திருந்த கவசம் 2004ல் மும்பை காவல் துறையால் வாங்கப்பட்ட கவசங்களில் ஒன்று.

அப்போது அந்தக் கவசங்களில் சிலவற்றை சோதித்துப்பார்க்க கோரேகானில் இருக்கும் காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சிக் களத்துக்கு அனுப்பினார்கள். சோதனையில் குண்டுகள் கவசத்தை துளைத்துவிட்டன. உடனே இது பற்றி புகார் எழுப்பப்பட்டது.

மொத்த கவசங்களையும் சப்ளை செய்யும்போது தரம் மேம்படுத்தப்படும் என்று (வியாபாரிகளால்) சொல்லப்பட்டிருப்பதால், ஆர்டரை ரத்து செய்ய வேண்டாம் என்று கோப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தரம் ‘மேம்படுத்தி’ சப்ளை செய்த கவசத்தில் ஒன்றைத்தான் கர்காரே அணிந்து கொண்டு போய் செத்தார்.

கர்காரே சாகும்போது அணிந்திருந்த கவசத்தை சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மனைவி கவிதா முன்வைத்தார். அரசிடமிருந்து பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கவிதா , அந்தக் கவசம் எங்கே என்று கேட்டு மனு செய்தார்.

இப்போது அரசு பதில் சொல்லியிருக்கிறது. கவசம் மிஸ்ஸிங்காம்.

ஏன் மிஸ்ஸிங் ? யோசியுங்கள். கவசம் கிடைத்து சோதித்தால், தரக் குறைவானது என்று தெரிந்தால், அப்போது கவசம் வாங்க அனுமதித்த தலைகளுக்கு ஆபத்து. கவசத்துக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்கிய விவரங்கள் வெளிவந்துவிடும்.

நம் சமூகத்தை மிகப் பெருமளவில் ஒவ்வொரு துறையிலும் சீரழித்துக் கொண்டிருப்பது லஞ்சம் ஊழல்தான். அது நோயல்ல; நோயின் அறிகுறிதான் என்று சொல்வதை என்னால் துளியும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. லஞ்சம் நம் தேசத்தை அழித்துக் கொண்டிருக்கும் புற்று நோய்.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

No comments:

Post a Comment

Popular Posts