காசு யாத்திரை


காசி யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உணவை..
காசு யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உறவை - எங்களை போல்..

யாம் அறிந்த டிவி தொகுப்பாளர்களிலே



எப்போதும் தமிழர்கள் தமிழை ஒழுங்காக பேசுவதில்லை, ஆங்கிலம் கலந்து அதிகமாக பேசுகிறார்கள்,தமிழில் பேசுவதை இழிவாக கருதுகிறார்கள்  என்ற  குற்றசாட்டு வரும் போது எல்லாம் முதலில் உருட்டப்படும்  தலை டிவி தொகுப்பாளர்கள்.
டிவி தொகுப்பாளர்கள் என்றவுடன் இந்த மியூசிக் சேனலில் விளம்பரத்துக்கும் பாட்டுக்கும் இடையில் வரும் யுவன் யவதி  மனதில் தோன்றிவிடுவார்கள்.இவர்களை திட்ட தோன்றும் நமக்கு நல்ல தமிழ் உச்செரிப்புடன் பேசும் சிலரை பாராட்ட தோன்றுவது இல்லை.இவர்களுக்கு இடையில் அவ்வபோது சில நல்ல தமிழ் உச்செரிப்புடன் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.அப்படி எனக்கு  பிடித்த,என்னை கவர்ந்த சிலரை பற்றி உங்களுடன் சின்ன பகிர்வு..

முதலில் சன் டிவியில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி ஆனந்த கீதன். இவர் சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியின்  தொகுப்பாளர்.இவர் கொஞ்சம் ரபி பெர்னார்ட் சாயலில் இருப்பார்.இவர் கொஞ்சும் தமிழில் பேசுவது மிக கவர்ச்சியாய்   இருக்கும்.ஆண்டுகள் பல கடந்து விட்ட போதும் இவரது தமிழும் முகமும்  நினைவில் இருந்தாலும் இவரது புகை படம் கிடைக்கவில்லை.

அடுத்து லலிதாவின் பாட்டுக்கு பாட்டு B.H ஹப்துல் ஹமீது.

இவர் இலங்கை வானொலியில் பணி புரிந்து ஏற்கனவே புகழ் பெற்று இருந்தாலும் எனக்கு அறிமுகம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் தான்.இவர் நிகழ்ச்சியில் பாட வருவபரின் முகவரியை கூறும் போது "இலக்கம் 14 இன் கீழ் 2 (14/2)" என்று  கூறுவதை பல முறை வியந்து ரசித்து உள்ளேன்.நிகழ்ச்சியின் இடையில் "மணி ஒலித்தது 'க' குறில் என்றாலும் நீங்கள் பாட வேண்டிய எழுத்து 'க' குறில் அல்ல 'கா' நெடில்" என்ற வாசகத்திற்கு நான் கொஞ்சம்(நிறைய) அடிமை.இவர்  குரலில் உள்ள வசீகரம் இன்றும் ஆச்சிரியம் அளிக்கிறது.


அடுத்ததாக நேருக்கு நேர் (நேர்முகம் )- ரபி பெர்னார்ட்


முதலில் சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியின் நேர்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரான ரபி பெர்னார்ட். சில வருடங்களுக்கு முன்பு நேருக்கு நேர் இவர் பேட்டி என்றாலே சரியான சூடு பறக்கும்.
ஆனால் இவர் மிக பொறுமையாக கேள்விகளை கேட்பார். அதுவும் இவரது "இப்போது பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிற செய்திகளை பார்த்தோமேயானால்" என கூறுவது மிக அழகாக இருக்கும். இவரது தமிழ் உச்செரிப்பு மிக அருமையாய் இருக்கும்.

அடுத்ததாக நேருக்கு நேர் வீர பாண்டியன்.



சன் டிவியில் இருந்து ரபி பெர்னார்ட் சென்றதும் இவர் இந்த நிகழ்ச்சியை  தொடர்ந்தார். இவர் ஒரு கேள்வி கேட்கும் போது மிக இலகுவாக சொல்வார்."இது செவி வழி செய்திதான் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை" என்று. இவர் எனக்கு கற்று தந்த புதிய சொற்றொடர் "செவி வழி செய்தி".


அடுத்ததாக நீயா நானா - கோபிநாத்



இவர் முதலில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் தொடங்கி பின் நீயா நானா மூலம் பிரபலம் ஆனவர்.இவர் பேசும் போது அந்த வார்த்தையில் உணர்வோடு பேசவது போல் இருக்கும்.அந்த கால் மாத்திரை ,அரை மாத்திரை அளவோடு பேசுவார் என்று தோன்றுகிறது. இவர் சொல்லும் "மனசு வலிக்கலையா" என்பது நிஜமாய் கொஞ்சம் வலிப்பது போல் தோன்றும்.இவர் சொல்லி கொடுத்த புதிய வார்த்தை "மெனகெடல்" .

இதை எழுதிய பிறகு நானே எனக்கு கேட்டுகொண்ட  கேள்வி.
"இந்த மெனகெடல் தேவை தானா "

மிடில் கிளாஸ் மனசு - 2

எல்லாரும் என்கிட்ட சொன்னாங்க..கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் நீ பதிவு போடவே போறது இல்லைன்னு..அப்ப நான் நினைச்சேன் நம்ப கல்யாணத்தின் போது ஏற்படும் மன அதிர்வை அப்படியே பதிவை போட்டு விட்டா போச்சு இது என்ன பெரிய விசயம்னு.ஆனா இப்ப அதை பத்தி போட வேண்டாம்னு தோணுது. இருந்தாலும் எனது Recepetion அன்று ஏற்பட்ட சின்ன மன அதிர்வலையை இங்கே பதிவு செய்கிறேன்.

எங்களுது திருமணத்தில் கும்பிட்டு கட்டி கொள்ளுதல் என்ற வழக்கம் உள்ளது. அனைவரது காலில் விழ வேண்டும்.பெரியவர் காலில் விழுவது ஒன்றும் தவறு இல்லை என்றாலும் எனது உடல் வாகு கொஞ்சம் இந்த நிகழ்வை தவிர்க்க விரும்பியது.(எனது மனைவி என்னை போலவே குண்டு என்பதால் அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்க வேண்டும் ).ஆனால் இதை திருமணத்தில் தவிர்க்க இயலாது என்பது நான் அறிந்ததே.தவிர்க்கவும் முடியவில்லை. இதனால் இதை Recepetion -இல் செய்ய கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.Recepetion கோபியில் என்பதால் இதை கோபி மக்கள் எதிர் பார்க்கவும் இல்லை. அங்கு இருந்த எங்களது சில உறவினர்கள் இதை எதிர் பார்த்து இருந்தனர் என்பதை நான் அறிந்தேன்.இருந்தாலும் நான் சுனா பானவா இருந்துவிட்டேன். அப்போது எனக்கு ஏழாம் வகுப்பில் இருந்து +2 வரை புத்தகமும் M.Sc வரை நோட் இலவசமாய் குடுத்த சரஸ்வதி டீச்சர் நடக்க முடியாமல் நடந்து வருவது தெரிந்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது இந்த டீச்சர் வந்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்தது. அந்த டீச்சர் என் அருகே வருவதற்கு முன் நான் சென்று அந்த டீச்சரை கை பற்றி அழைத்து வந்தேன். கை தூக்கி விட்ட டீச்சர் மட்டும் அல்ல அவர் நான் என் காலரையும் தூக்கி இருக்கும் படி செய்த டீச்சர்.அவர் எங்களுக்காக கொண்டு வந்த பரிசை திறக்க முற்பட்டார் நானும் அவருக்கு அதை பிரிக்க உதவி செய்ய அது ஒரு சாமி படம். நல்ல பொருத்தமான படம். என்ன படம்னு கேட்காதிங்க..படத்தை பாருங்க..இந்த சமயத்தில் மனதில் மறுபடி ஒரு போராட்டம்.நான் இப்போது இவர் காலில் விழுந்தால் எனது உறவினர்கள் என்னை தப்பாய் நினைப்பார்கள்.என்ன செய்வது..அதற்காக இவர் காலில் விழாமலும் இருப்பது என்பது எனக்கு கஷ்டமாய் இருக்க கூடும்.எப்படியும் இவர் காலில் விழுவது என்று முடிவு செய்து அவரை என் இருக்கை வரை அழைத்து வந்து திரும்பினால் நான் கடன் வாங்கிய எனது உறவினர் ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து சிரித்த படி இருக்கிறார்.அவரில் காலில் விழாமல் என் டீச்சர் காலில் விழலாமா என்று யோசித்த நிமிடத்தில் என் சிந்தனை தகர்த்தது காமெராவின் பிளாஷ். எனது சரஸ்வதி டீச்சர் வழக்கம் போல் என்னிடம் குரு தட்சணை வாங்காமல் நகர்ந்து சென்றார்.நானும் அடுத்த போட்டோவிற்கு போஸ் குடுக்க (வெட்கமில்லாமல்) சிரித்த படி தயார் ஆனேன்.

இது ஒரு மிக பெரிய நிகழ்வு அல்ல.ஆனால் இது போல் நிறைய சின்ன நிகழ்வுகள் நடந்த படியே கழிகிறது நாட்கள். இது ஏன் என்று பதில் நோக்கிய கேள்விகள்..
நான் விரும்பியதை செய்ய முற்படுவதை விட பிறர் விரும்பாததை (விரும்பாதது என்று நான் நினைப்பதை) செய்யாமல் இருபத்திலேயே வாழ்கை கழிந்து விடுமா.
அது மட்டும் இல்லை என் உறவினர்கள் இல்லாவிடில் அவர் காலில் விழுந்து இருக்கலாம் என்று என்னை நானே ஏமாற்றி நல்லவன் போல் கட்டி கொள்கிறேனா என என்னுள் தொடரும் கேள்விக்கு நடுவில் சினுங்குகிறது என் செல்போன்.பேச்சின் தொடகத்தில் முடிந்து போகிறது பதில் தேடும் பயணம்..


 
இந்த பதிவு ஒன்னும் பாவ விமோசனம் இல்லை.இதை வெளிப்படையாய் சொல்லுவதில் ஒரு சின்ன மன நிறைவு.அப்பறம் நான் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு ஒரு பில்ட் அப்.அவ்வளவு தான்

Popular Posts