அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 4 : முதலில் உதவிய எழுவர் (ஏழு பேர் )

காட்சி 19:
நாங்கள் திருப்பூர் சென்று திரு ராஜேந்திரன் மற்றும் திரு சுப்ரமணியை சந்தித்தோம். அவர்கள் இருவரும் அம்மாவை தொழில் செய்யும் படி ஊக்க படுத்தினார்கள்..குறிப்பாக ராஜேந்திரன் இந்த வேலையின் அடிப்படை பற்றி சொல்லி கொடுத்தார். அம்மாவும் இதே தொழிலை நடத்த முடிவு செய்தார் . இன்றும் செய்து கொண்டு உள்ளார்.

(இந்த முப்பது வருடத்தில் ராஜேந்திரன் அவர்கள் இந்த தொழில் இருந்து வேறு தொழிலுக்கு சென்று விட்டார். அம்மா இன்னமும் திரு.சுப்பிரமணி அவர்களிடம் தான் துணியை விற்று கொண்டு இருக்கிறார் . இதை இங்கே நான் சொல்ல காரணம் இருக்கிறது. நானும் என் தம்பியும் அந்த சுப்பிரமணி அவர்கள் நமக்கு நிறைய லாபத்தை தருவது இல்லை. நாம் வேறு இடத்தில துணியை போடலாம் என எங்கள் அறிவு வந்து விட்டதாக நினைத்த நாளில் இருந்து கூறி வருகிறோம் அப்போது எல்லாம் அம்மா சொன்ன பதில் இது ஒன்று தான். துடுப்பற்ற நிலையில் பாய்மரமாய் காற்றாய் இருந்தவர்கள் அவர்கள். எனவே அவர் தொழில் செய்யும் வரையில் , அல்லது என் காலம் வரையில் இவர்களிடம் தான் தொழில் செய்ய வேண்டும் என்பார்)

காட்சி 20:
அப்பா எல் ஐ சி பாலிசி எடுத்து ஆறு மாதத்தில் இறந்து விட்டதால் பணம் வருவதற்கு நிறைய விளக்கங்களை குடுக்க வேண்டி இருந்தது . நானும் அம்மாவும் எங்கள் வீதியில் இருந்த ஏஜென்ட் திரு தேவராஜும் அவரது மேலாளார் திரு கே.சோமசுந்தரமும் தொடர்ந்து கேட்ட எல்லா ஆவணங்களையும் கொடுத்து கொண்டு இருந்தோம். இறுதியாக அப்பாவை பரிசோதித்த டாக்டர் ஸ்ரீதர் எழுதி கொடுத்த செர்டிபிகேட் உதவியால் அந்த பணம் 30000/- வந்தது.
(அம்மா இப்போதும் என்னை டேர்ம் பிளான் எடுக்க அனுமதிப்பது இல்லை)

காட்சி 21: அப்பா இறந்த ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்தனர். தொடர்ந்து பலரும் எங்கள் வீட்டிற்க்கு வந்த வண்ணம் இருந்தனர். வருபவர்கள் எல்லாம் பிஸ்கட் பாக்கெட்டு கொண்டு வந்ததில் எங்கள் வீட்டில் 5-6 பெரிய பெட்டிகள் பிஸ்கட் சேர்ந்து இருந்தது. தீடீரென தொழில் மிக லாபகரமாக ஓடியது . வேனில் துணி ஏற்றி செல்லும் அம்மா செல்லும் அம்மா லாரியில் செல்ல தொடங்கி இருந்தார். அப்போது சென்னையில் இருந்து பத்தாவது முடித்து இருந்த எங்கள் பெரியம்மா மகன், திரு ராமு அண்ணண் அம்மாவின் உதவிக்கு வந்து இருந்தார். அவர் மிக கடுமையான உழைப்பாளி.

காட்சி 22: எங்கள் ஒன்று விட்ட பெரியப்பா திரு.முத்து கிருஷ்ணன் வந்தார். அப்போ அவர் சொன்னார். எங்கள் அப்பா ஒரு இடத்தை மதுரையில் இருக்கும் போது வாங்கியதாகவும் அதனை அவரிடம் ரூபாய் 7000-க்கு அடகு வைத்து இருப்பதாகவும் கூறினார். உடனே அவர் எனக்கு வட்டி இல்லாமல் அசலை மட்டும் தவணை முறையில் குடுத்து திருப்பி கொள்ளும் படி கூறினார். அம்மாவும் சரி என ஒத்து கொண்டார். சில மாதங்களுக்கு பின் அப்படியே அந்த நிலத்தை திருப்பி விற்று விட்டோம். அப்போ அந்த இடம் மதுரையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது. நாங்கள் விற்று ஒரு வருடத்தில் அந்த இடத்திற்கு அடுத்த வீதியில் மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் அறிவிப்பு வந்தது வேற கதை. இந்த பணத்தையும் எல் ஐ சி பணத்தையும் வைத்து தான் நாங்கள் பின் நாளில் நாங்கள் இப்ப இருக்கும் இடத்தை வாங்கினோம்.

காட்சி 23: மூன்று மாதம் முடிந்து இருந்தது, அது தேர்தல் நேரம் மே மாதம் 1991, புயலுக்கு பின் வசந்தம் வீச ஆரம்பித்து மூன்று மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் அடுத்த புயல் வீச தொடங்கியது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லமால் ஆனது. உடலில் எதோ பூச்சி கடித்து உடல் முழுவதும் தடித்து விட்டது. எந்த மருந்து கொடுத்தும் கேட்க வில்லை. எங்கள் அம்மாவை பார்க்க வந்த எல்லாரும் இந்த இரண்டு பசங்களுக்காகவாது எங்க அம்மா உயிரோடு இருக்க வேண்டும் என்று எங்கள் காசு பட பேசி சென்றனர். அப்போது தான் என் தம்பியும் என்கிட்ட நீ தான் அப்பாவுக்கு தீ வச்ச, அதுனால் தான் அப்பவால் எழுந்து வர முடியல என என்னிடம் சண்டை போட ஆரம்பத்து இருந்தான். அம்மாவுக்கு நாட்டு வைத்தியரிடம் காட்டலாம் என முடிவு செய்து புறப்பட்டு கொண்டு இருந்த போது ஒரு செய்தி வந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு இருந்தார். ஊரடங்கும் சோதனையுமாய் தமிழகம் இருந்தது. எங்கள் பயணம் கை விட பட்டது. அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் தேறி வந்து கொண்டு இருந்தார்.. அப்போதும் திரு ராமு அண்ணண் இருந்ததால் கடை நடத்துவது சிரமம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. ராமு அண்ணன் அம்மாவிற்கு ஊறுதுணையாக இருந்த படி கோபியில் தொடர்ந்து மேற்படிப்பை தொடர்வதாக இருந்தது. ஏனோ அது அவ்வாறு நடக்க வில்லை.
(ராமு அண்ணன் இப்பொ சிங்கப்பூரில் செழிப்பாக இருக்கிறார் என்றாலும் அது நடந்து இருந்தால் நிச்சயமாக கொங்கு மண்டலத்தில் ஒரு மிக பெரிய தொழில் அதிபராய் மாறி இருக்க கூடும்.)

அம்மா முழுமையாக தேறி இருந்தார். அண்ணனும் திரும்பி சென்னைக்கே புறப்பட்டு இருந்தார்.

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
10-07-2021

அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 3 அம்மா_நாச்சம்மை

#அப்பா_சொக்கலிங்கம்
#அம்மா_நாச்சம்மை

காட்சி 12:அம்மா வாசலில் இருந்த கார் ஓட்டுநரை திரும்பி பார்க்க, அவர் உடனே என் தங்கச்சிக்கு ஒன்னுனா அப்படியேவா   விட்டுட்டு போவேன். நான்  உங்க சொந்த ஊர் வரை விட்டு விட்டு வருகிறேன்  என்கிறார். (இப்படி தான்  வழி நெடுகிலும்  பல முகம் தெரியாத/தெரிந்த  அண்ணன்களை எங்கள் அம்மா பெற்று இருக்கிறார்). அப்பாவின் உடலை  சொந்த ஊர்  கொண்டு சென்றுவிட்டு  எங்களுக்கு மற்ற  உறவினருக்கு தந்தி அனுப்பி வர செய்தார்கள்.அதன் பிறகு தான்  அம்மா அழ தொடங்கி இருந்தார். எங்களது அப்பாவின் அப்பாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். அதனால்  அவரிடம் யாரும் எங்கள் அப்பாவின் இறப்பு பற்றி  சொல்லவில்லை.

காட்சி 13: உறவினர்கள் வந்து சேர்ந்து அப்பாவிற்கு இறுதி சடங்கு செய்யும் நேரம். பறை அடிப்பவர்கள் எங்கள் வீடு வாசலில் அடித்து கொண்டு இருந்தார்கள். எங்கள் ஊரு குழந்தைகள்பறை அடிக்குக்கேற்ப ஆடி கொண்டு இருந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து என்  உறவினர்களின் குழந்தைகளும்  நானும் (வயது 9) என் தம்பியும் (7) ஆடி கொண்டு இருந்தோம். ஒரு உறவினர் வந்தார் , " டேய் செத்தது உங்க அப்பா நீங்க ஆடக்கூடாது என்றார். அதுவும் என்னை பார்த்து நீ தான்  கொள்ளி வைக்கணும். உள்ள வந்து தயார் ஆகு என்றார் ..

காட்சி 14: அப்பாவின் உடலை எடுக்கும் சரியான நேரத்தில் எங்களது பெரியம்மா குடும்பம் சென்னையில் இருந்து வந்து சேர்ந்தது. வைரம் அண்ணன் வாங்கி வந்த ரோஜா-பூ மாலையை போட்டு தூக்கினார்கள்.என் கையில் கொள்ளி சட்டியை கொடுத்து தூக்க சொன்னார்கள்.  அதன் புகை நெடி அதிகமாக இருந்தால் மிக குறைவாக இட்டு தூக்க சொன்னார்கள். (பிறகு ஜெய் ஹிந்து  படத்தில் கிளைமேக்ஸில் அதே போன்று காட்சி வரும், அதை பார்க்கும் போது  எல்லாம் அந்த நினைவு வந்து போகும்)

காட்சி 15: இதற்கு இடையில் நாங்கள் வசித்து வந்த கோபியில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் எங்கள் அப்பா தொழில் செய்ய பொருள் வாங்கும்/விற்கும் முதலாளிகளிடம் சென்று எங்க அப்பா இறந்தது குறித்து கூறி மேலும்  எங்க அம்மா அந்த ஊரில் தொடர்ந்து தங்க மாட்டார் எனவும் , அவர்கள் உறவினர்கள் இருக்கும் மதுரைக்கு  சென்று விடுவார்  என கூறி அதனால்  அந்த தொழில் தொடர்ந்து தாங்கள் நடத்துவதாக கேட்க  அவர்கள் இரு முதலாளிகள்(திரு.சுப்பிரமணி / திரு .ராஜேந்திரன்) இருவரும்  கலந்து பேசி நாங்கள் அந்த அம்மாவை பார்த்தது இல்லை , அந்த அம்மா வந்து தொழிலை நடத்தாவிடில் உங்களுக்கு தருகிறோம் என்று கூறி உள்ளார்கள்.ஒரு மாதம் வரை பார்க்கலாம் என்று கூறி உள்ளார்கள்

காட்சி 16: அம்மா அப்பா இறந்த  பின் பூவையும் பொட்டையும் துறந்து இருந்தார். அப்போது வெள்ளை  புடவை அணிவது தான் பழக்கமாய் இருந்தது. அம்மா அதை ஏற்கவில்லை. அவர் தொடர்ந்து கலர் புடவையை அணிய தொடங்கினார். ஏன் பொட்டையும் பூவையும் துறந்தார் என தெரியவில்லை. அடுத்த முறை நேரில் பார்க்கையில் கேட்க வேண்டும்   

காட்சி 17: அப்பா இறந்து 10 நாட்கள் இருக்கும், மாமா  அம்மாவிடம் என்ன செய்வதாக உத்தேசம் என  கேட்க, அம்மா அடுத்த கணமே நான் கோபியே சென்று விடுகிறேன் என கூறினார். மாமா  எங்களுக்கு பக்கமா இருக்க கூடாது  என கேட்க அம்மா இல்லை அது சரிப்படாது, நான்  அங்ககேய போறேன் என  கூற மாமாவும் சரி என கூறி நாங்கள் கோபி வந்துவிட்டோம். எங்களுடன் அப்பாவின் கடைசி அண்ணன் மணி பெரியப்பா வந்து கோபியில் விட்டுவிட்டு சென்று விட்டார்.  

காட்சி 18: அப்பா இறந்து 15-ஆம் நாள், திருப்பூருக்கு வேனில் சரக்கை ஏற்றி திருப்பூர் செல்ல வேண்டும் என  கூற , திருப்பூரில் அந்த கடைகளின் விலாசம் தெரியாது என  அம்மா பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் கூற நான் உடனே உடனே அம்மாவிடம் ,  அப்பா கடைசியா போகும் போது நானும் போனேன்ல , அதனால் போன வேன் பேர் கிருஷ்ணா எனக்கு தெரியும் என்று கூறி  அந்த வண்டி எண்ணையும் யும் கூற உடனே அந்த வீதியை  சேர்ந்த வெங்கடேஷ் அண்ணன் நானும் அடுத்த நாள் வேன் நிக்கும் திடல் சென்று அந்த வேன்யும் ஓட்டுனரையும்  பார்த்து  கேட்க அவரும் திருப்பூரில் அந்த ஏரியா பேரை சொன்னார். ஆனால் கடை தெரியாது என்றார் . உடனே நான்  அது ராயல்  பேக்கரி பக்கத்தில் என்றேன். அப்ப  சரி கேட்டு போயிரலாம் என்றார். உடனே வேனை வாடகைக்கு எடுத்து வந்தோம். தம்பியை பக்கத்து அக்காகளிடம் விட்டுவிட்டு என்னை கூட்டி செல்வதாக திட்டம் இட்டோம் சரக்கு மூட்டைகளை ஏற்றி விட்டு அம்மா அந்த வேனில் ஏறினார்.என் கையை புடித்து வேனுக்குள் மேல வர செய்தார்.

அந்த கைப்பிடி என்னை வேனுக்குள் மேல் வர மட்டும் அல்ல, அதன் பிறகு  பல முறை என்னை மேல்  வர தூக்கி விட்டு உள்ளது . அவரும் வேனில் மட்டும் ஏறவில்லை.. வாழ்க்கையில் ஏற  தயராகி இருந்தார். 

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
03-07-2021

அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 2 : அப்பா புறப்பாடு - 2

1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் நான்காவது வாரம்...

காட்சி 5 : அப்பாவிற்க்கு தீடீரென உடல் சோர்ந்து , நீரிழப்பு (dehydrate ) ஆனது. எங்களுக்கு ஏன் என்றே தெரியவில்லை தனியார் மருத்துவரிடம் அழைத்து சென்றோம் . இரண்டு நாட்கள் பிறகும் பெரிய முன்னேற்றம் இல்லை. பின்பு மருத்துவ மனையில் சேர்க்க சொன்னதால் அரச மருத்துவ மனையில் சேர்த்தோம்.. என்ன ப்ரிச்சனை என்றே தெரியவில்லை.. ஆனால் உடலில் எந்த முன்னேற்றம் இல்லை.. சொல்ல போனால் அவரால் நீரே அருந்த முடியவில்லை

காட்சி 6: அவரை அரசு மருத்துவமனையில் இருந்து , மருத்துவர் ஸ்ரீதர் அவர்களின் மருத்தவ மனைக்கு அழைத்து சென்றோம். அவரும் மருத்துவர் ரவீந்தரனும் பார்த்தார்கள். இவருக்கு நீர் ஒவ்வாமை இருக்கிறது . எப்போதேனும் நாய் கடித்ததா என்று கேட்டார்கள்.. அம்மா அப்படி ஏதும் இல்லை என்றார் ...அப்பா ஆம் என்றார் .. ஒரு முறை கடித்ததா /கீரியதா என தெரியவில்லை என்றார். சிறு ரத்தம் தான் வந்தது, விட்டு விட்டேன் என்றார்..உடனே அவரை விலங்குகள் கடித்தல் சிகிச்சையில் புகழ் பெற்ற குன்னூரில் உள்ள pasteur institute-க்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

காட்சி 7: அவரை குன்னூரில் உள்ள pasteur institute அழைத்து சென்றோம். அவரை பரிசோதித்த மருத்வர்கள் நீர் ஒவ்வாமை வந்த பிறகு காப்பற்றுவது கடினம், அதிகம் பட்சம் ஓர் நாள் உயிரோட கூடும்.. சொந்த ஊருக்குள் உடனே அழைத்து செல்லுங்கள் என்று அம்மாவிற்கு சொல்லிவிட்டார்கள்.அம்மா அழவே இல்லை. எல்லா தங்கைக்கும் ப்ரிச்சனையின் போது தோன்றும் முதல் முகம் அண்ணன்/தம்பி தான். அம்மா மதுரையில் உள்ள மாமாவிடம் கூட்டி செல்ல முடிவெடுத்தார். வாடகை காரில் மதுரை புறப்பட்டோம்.

காட்சி 8: மதுரை வழியாக சொந்த ஊருக்கு செல்கையில் மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு முறை காட்டலாம் என்றார்கள். அங்கு சென்றோம் . அங்கும் காப்பாற்ற முடியாது என்றார்கள். மருத்துவரை சந்தித்து விட்டு வெளிய விடுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த பணியாளர் சற்று இருளான இடத்தில நிறுத்தி வைத்து விட்டு 50 ரூபாய் தந்தால் தான் வெளியில் கொண்டு வந்து விடுவேன் என்று அம்மாவிடம் சொல்ல அப்பாவிற்கு கோவம் வந்து அந்த பணியாளரிடம் , உன்னை சும்மா விட மாட்டேன் , நான் உன்னை பற்றி புகார் அளிக்கிறேன் என சொல்லி கொண்டே தானே எழுந்து நடந்து வந்து விட்டார்

காட்சி 9: மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றோம். அங்கே உள் நுழைந்தவுடன் மாமாவை பார்த்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த இல்வாழ்க்கையின் நடந்த தவறுகள் அனைத்திற்கும்,பொருளிழப்பிற்கும் நானே காரணம் என்றாலும் என்னை மன்னித்து எப்படியாவது உயிரை காப்பாற்றி தரும்படி வேண்டினார். மாமா அவரை ஆறுதல் படுத்தி , நாங்கள் கோபியில் இருந்து சென்ற வாடகை காரை வாடகை மாற்றி வேறு காரை எடுத்து கொண்டு எங்களை(என்னையும் என் தம்பியையும்) மாமா வீட்டில் விட்டு விட்டு அம்மா அப்பா மாமா எல்லாரும் சித்த வைத்திய மருந்து குடுக்கலாம் என்று புறப்பட்டார்கள். அப்பா அவசர அவசரமாய் அம்மாவை பார்த்து புது செருப்பு அந்த வண்டியில் இருக்கு மறந்தரமா எடுத்துக்கோ என்றார்.

காட்சி 10: . சித்த வைத்திய வைத்திய சாலை செல்லும் வழியில் அப்பா அம்மாவிடம், எனக்கு எதுவும் ஆகிவிட்டால்..பிள்ளைகளை நல்லா படிக்க வச்சிரு..யாரு வீட்டுலையும் விட்டு விடாத என்றாராம்.

காட்சி 11: சித்த வைத்திய வைத்திய சாலையில் மருந்தை அரைத்து கொண்டு இருந்தார்களாம்.. அப்பா மாமாவிடம் எங்க பங்காளிகள் எல்லாம் எங்கள் குல தெய்வத்துக்கு கிடாரி வெட்டாமல் இருக்கிறார்கள் நீங்கள் வெட்ட வைப்பீர்களா சத்தியம் செய்யுங்கள் என்றாராம். உங்க பங்களிக்காக நான் சத்தியம் செய்ய முடியாது நான் முயற்சி செய்கிறேன் என்றாராம். மருந்து தயார் ஆகி , மருந்தோடு சேர்த்து சிறு உணவை வாயில் அம்மா வைக்கையில் அப்பா காற்றில் கரைந்து இருந்தார்..

அப்பா இறந்து விட்டார் என அங்கு இருந்த எல்லாரும் சொன்னார்களாம்....

அம்மா அழவே இல்லையாம்... உடனடியாக அங்கே வாசலில் இருந்த கார் ஓட்டுநரை மட்டும் திரும்பி பார்த்தாராம்..

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
26-06-2021

(குறிப்பு : நான் சிக்கனமாக இருக்க , கணக்கு பாடத்தில் சற்று ஆர்வமாகவும் சற்று புலமையுடனும் அதிகமாக இருக்க அவர்(அப்பா) தான் காரணம் என்று அவரிடம் சொல்ல எனக்கு வாய்ப்பே இருக்க வில்லை. ஒரு வாரமோ , பல வருடமோ , என்னை போலவே யாருக்கும் அப்பாக்கள் திடீரெனெ இல்லாமல் போக கூடும். அதற்கு முன் அவரிடம் பேசுங்கள்/அவர் உங்களுக்கு கற்று கொடுத்ததை அவரிடம் சொல்லி சிலாகியுங்கள்/ உங்கள் குழந்தைகளை தினமும் தொலைபேசி வழியேனும் பேச வையுங்கள்.

அம்மாவும்அப்பாவும்நாங்களும் -1: அப்பா புறப்பாடு - 1

மிக சரியாக 30 வருடங்களுக்கு முன் , 1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம்...
காட்சி 1: அப்பா செய்த புதிய தொழில் கொஞ்சம் நல்ல வருமானம் தர தொடங்கி இருந்த நேரம், எனது தாய் மாமா எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்.. அப்பா மாமாவிடம் நீங்க கல்யாணத்துக்கு போட்ட நகை எல்லாத்தையும் கடந்த பத்து வருடத்தில் விற்று விட்டேன். இப்பதான் கொஞ்சம் காசு சேர்ந்து இருக்கு, நண்பர்களிடம் 10000 ரூபாய் கொடுத்து வைத்து இருக்கிறேன். அதை இன்னும் ஓரிரு மாதத்தில் வாங்கி தருகிறேன், முதலில் செயினோ/வளையலோ வாங்கி விடலாம் என்றார்.

காட்சி 2: நானும் அப்பாவும் வாடகை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அவருக்கு numberology -இல் ஆர்வம் உண்டு வழியில் எந்த வண்டியை பார்த்தாலும் அதன் நம்பர் பிலேட்டில் உள்ள எண்களை கூட்டி விடுவார்.. அன்றும் என்னை வழியில் செல்லும் பல வண்டிகளின் எண்களை கூட்ட சொன்னார்..கணக்கு பாடம் ரொம்பமுக்கியம் அதுக்கு தான் இந்த பயிற்சி என்றார். அப்போது இன்னொன்றும் சொன்னார். தான் புது சைக்கிள் வாங்க முன்பணம் கட்டி விட்டதாகவும், நாகப்பா சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வரும் என சொன்னார். அதன் பிறகு வாடகை சைக்கிள் எடுக்க தேவை இருக்காது என்றார்.

காட்சி 3: அம்மாவும் அப்பாவும் கடைவீதி சென்று அம்மாவுக்கு புதிய செப்பல்/காலனி வாங்கி வந்து இருந்தார்கள். முதல் முறையாக அம்மா ஹவாய் காலணி இல்லாமல் சற்றே விலை கூடிய காலணியை வாங்கி இருந்தார்.

காட்சி 4: அப்பாவை பார்க்க வந்த அவரின் நண்பர் வெங்கடேஷிடம் , அடுத்த தடவ நீ என்னை பார்க்கணும்னா மேல தான் வரணும் என்றார் . அவர் ஏன் என வினவ, தான் அதே வீதியில் சற்று புதிதாய் கட்டிய வீட்டில் முதல் அடுக்கில் தனி வீடாக வாடகைக்கு பார்த்து முன்பணம் கொடுத்து இருப்பதாக சொன்னார். ஆம்..எனக்கு அது தனி வீடு என்பதை விட அந்த வீட்டில் தனி கழிப்பறையும், பைப் /குழாய் இருக்கும் என்பது மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது..

ஆனால் அதற்கு அடுத்து வந்த வாரம், இந்த காட்சிகள் பலவற்றை புரட்டி போட்டு விட்டது. ஆம்..உண்மை தான்.. தனி கழிப்பறை உள்ள வீட்டிற்கு நாங்கள் போக கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகி விட்டது.

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
19-06-2021

Popular Posts