அம்மா_நாச்சம்மை

#அப்பா_சொக்கலிங்கம்
#அம்மா_நாச்சம்மை

காட்சி 12:அம்மா வாசலில் இருந்த கார் ஓட்டுநரை திரும்பி பார்க்க, அவர் உடனே என் தங்கச்சிக்கு ஒன்னுனா அப்படியேவா   விட்டுட்டு போவேன். நான்  உங்க சொந்த ஊர் வரை விட்டு விட்டு வருகிறேன்  என்கிறார். (இப்படி தான்  வழி நெடுகிலும்  பல முகம் தெரியாத/தெரிந்த  அண்ணன்களை எங்கள் அம்மா பெற்று இருக்கிறார்). அப்பாவின் உடலை  சொந்த ஊர்  கொண்டு சென்றுவிட்டு  எங்களுக்கு மற்ற  உறவினருக்கு தந்தி அனுப்பி வர செய்தார்கள்.அதன் பிறகு தான்  அம்மா அழ தொடங்கி இருந்தார். எங்களது அப்பாவின் அப்பாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். அதனால்  அவரிடம் யாரும் எங்கள் அப்பாவின் இறப்பு பற்றி  சொல்லவில்லை.

காட்சி 13: உறவினர்கள் வந்து சேர்ந்து அப்பாவிற்கு இறுதி சடங்கு செய்யும் நேரம். பறை அடிப்பவர்கள் எங்கள் வீடு வாசலில் அடித்து கொண்டு இருந்தார்கள். எங்கள் ஊரு குழந்தைகள்பறை அடிக்குக்கேற்ப ஆடி கொண்டு இருந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து என்  உறவினர்களின் குழந்தைகளும்  நானும் (வயது 9) என் தம்பியும் (7) ஆடி கொண்டு இருந்தோம். ஒரு உறவினர் வந்தார் , " டேய் செத்தது உங்க அப்பா நீங்க ஆடக்கூடாது என்றார். அதுவும் என்னை பார்த்து நீ தான்  கொள்ளி வைக்கணும். உள்ள வந்து தயார் ஆகு என்றார் ..

காட்சி 14: அப்பாவின் உடலை எடுக்கும் சரியான நேரத்தில் எங்களது பெரியம்மா குடும்பம் சென்னையில் இருந்து வந்து சேர்ந்தது. வைரம் அண்ணன் வாங்கி வந்த ரோஜா-பூ மாலையை போட்டு தூக்கினார்கள்.என் கையில் கொள்ளி சட்டியை கொடுத்து தூக்க சொன்னார்கள்.  அதன் புகை நெடி அதிகமாக இருந்தால் மிக குறைவாக இட்டு தூக்க சொன்னார்கள். (பிறகு ஜெய் ஹிந்து  படத்தில் கிளைமேக்ஸில் அதே போன்று காட்சி வரும், அதை பார்க்கும் போது  எல்லாம் அந்த நினைவு வந்து போகும்)

காட்சி 15: இதற்கு இடையில் நாங்கள் வசித்து வந்த கோபியில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் எங்கள் அப்பா தொழில் செய்ய பொருள் வாங்கும்/விற்கும் முதலாளிகளிடம் சென்று எங்க அப்பா இறந்தது குறித்து கூறி மேலும்  எங்க அம்மா அந்த ஊரில் தொடர்ந்து தங்க மாட்டார் எனவும் , அவர்கள் உறவினர்கள் இருக்கும் மதுரைக்கு  சென்று விடுவார்  என கூறி அதனால்  அந்த தொழில் தொடர்ந்து தாங்கள் நடத்துவதாக கேட்க  அவர்கள் இரு முதலாளிகள்(திரு.சுப்பிரமணி / திரு .ராஜேந்திரன்) இருவரும்  கலந்து பேசி நாங்கள் அந்த அம்மாவை பார்த்தது இல்லை , அந்த அம்மா வந்து தொழிலை நடத்தாவிடில் உங்களுக்கு தருகிறோம் என்று கூறி உள்ளார்கள்.ஒரு மாதம் வரை பார்க்கலாம் என்று கூறி உள்ளார்கள்

காட்சி 16: அம்மா அப்பா இறந்த  பின் பூவையும் பொட்டையும் துறந்து இருந்தார். அப்போது வெள்ளை  புடவை அணிவது தான் பழக்கமாய் இருந்தது. அம்மா அதை ஏற்கவில்லை. அவர் தொடர்ந்து கலர் புடவையை அணிய தொடங்கினார். ஏன் பொட்டையும் பூவையும் துறந்தார் என தெரியவில்லை. அடுத்த முறை நேரில் பார்க்கையில் கேட்க வேண்டும்   

காட்சி 17: அப்பா இறந்து 10 நாட்கள் இருக்கும், மாமா  அம்மாவிடம் என்ன செய்வதாக உத்தேசம் என  கேட்க, அம்மா அடுத்த கணமே நான் கோபியே சென்று விடுகிறேன் என கூறினார். மாமா  எங்களுக்கு பக்கமா இருக்க கூடாது  என கேட்க அம்மா இல்லை அது சரிப்படாது, நான்  அங்ககேய போறேன் என  கூற மாமாவும் சரி என கூறி நாங்கள் கோபி வந்துவிட்டோம். எங்களுடன் அப்பாவின் கடைசி அண்ணன் மணி பெரியப்பா வந்து கோபியில் விட்டுவிட்டு சென்று விட்டார்.  

காட்சி 18: அப்பா இறந்து 15-ஆம் நாள், திருப்பூருக்கு வேனில் சரக்கை ஏற்றி திருப்பூர் செல்ல வேண்டும் என  கூற , திருப்பூரில் அந்த கடைகளின் விலாசம் தெரியாது என  அம்மா பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் கூற நான் உடனே உடனே அம்மாவிடம் ,  அப்பா கடைசியா போகும் போது நானும் போனேன்ல , அதனால் போன வேன் பேர் கிருஷ்ணா எனக்கு தெரியும் என்று கூறி  அந்த வண்டி எண்ணையும் யும் கூற உடனே அந்த வீதியை  சேர்ந்த வெங்கடேஷ் அண்ணன் நானும் அடுத்த நாள் வேன் நிக்கும் திடல் சென்று அந்த வேன்யும் ஓட்டுனரையும்  பார்த்து  கேட்க அவரும் திருப்பூரில் அந்த ஏரியா பேரை சொன்னார். ஆனால் கடை தெரியாது என்றார் . உடனே நான்  அது ராயல்  பேக்கரி பக்கத்தில் என்றேன். அப்ப  சரி கேட்டு போயிரலாம் என்றார். உடனே வேனை வாடகைக்கு எடுத்து வந்தோம். தம்பியை பக்கத்து அக்காகளிடம் விட்டுவிட்டு என்னை கூட்டி செல்வதாக திட்டம் இட்டோம் சரக்கு மூட்டைகளை ஏற்றி விட்டு அம்மா அந்த வேனில் ஏறினார்.என் கையை புடித்து வேனுக்குள் மேல வர செய்தார்.

அந்த கைப்பிடி என்னை வேனுக்குள் மேல் வர மட்டும் அல்ல, அதன் பிறகு  பல முறை என்னை மேல்  வர தூக்கி விட்டு உள்ளது . அவரும் வேனில் மட்டும் ஏறவில்லை.. வாழ்க்கையில் ஏற  தயராகி இருந்தார். 

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
03-07-2021

No comments:

Post a Comment

Popular Posts