மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்...




மேக மூட்டமாய் இருப்பதால் வீட்டுக்கு செல்லும் போது மழை வந்து விட கூடாது என்ற எண்ணத்துடனும் வீடு வந்தவுடன் மழையை எதிர் பார்த்து மழை வந்தால் ரசிக்கும் சராசரி மனிதன் நான்.எனக்கு மழை மீது பெரிய ஆர்வம் இல்லை என்ற போதும் மழைக்கும் எனக்குமான தொடர்பு பல ஆச்சரியத்தையும் அதன் குறித்த பதில்களையும் யோசிக்க வைத்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே பெய்து கொன்டிருக்கும் மழையை ரசித்த படியே மழைக்கும் எனக்குமான உறவை மனம் லேசாய் அசை போட்டது. எனக்குள் பெய்த ஞாபக மழையில் உங்களுக்கு சில சாரல்கள்...



எனது சின்ன வயதில் மிக பெரிய லட்சியம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால் மழை முடிந்து போகிற இடத்தை (நிலபரப்பு) பார்த்து விடுவது .இதற்கான வாய்ப்பு பயணத்தில் மழை வரும் போது மட்டும் தான் கிடைக்கும்.ரயில் பயணம் என்றாலும் சரி அது என் அம்மாவுடன் நான் சென்ற 407 வேன் என்றாலும் சரி மழையின் ஈரம் சாலையில் முடியும் இடத்தை பார்த்து விட முயற்சித்தும் எனது தூக்கம் அல்லது கூட வரும் என் அம்மாவுடனான பேச்சு இந்த இலட்சியத்தை அடைய விடாமல் தடுத்துவிடும்.சற்று நேரத்தில் ஈர நிலத்தில் இருந்து சாதாரண நிலம் வந்து விடும் போது இன்றும் தோத்து விடோம் என்ற உணர்வு ஒட்டி கொள்ளும். அது மட்டும் அல்லாது மழை வரும் இடத்தை நாம் கடந்து விட்டோமா அல்லாது மழை வருவதின் செறிவு குறைந்து மழை இங்கு பெய்ய வில்லையா என்ற கேள்வி தொத்தி கொள்ளும்.

இப்போது போலவே நான் சின்ன பையன் இருந்த போதும் மழை வரும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள்.பெரும்பாலும் இந்த மழை காலையில் வராது. அப்படியே வந்தாலும் பள்ளி செல்லும் நேரத்துக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி நின்று விடும்.(இப்ப கூட அப்படி தான் ) சாயங்காலம் தான் அதிகமாக வரும் அதனால் கடைசி இரண்டு பிரிவுகள் (peroids) மட்டும் குறைத்து அனுப்பி விடுவார்கள்.மழை காரணமாக மைதானம் ஈரமாய் இருப்பதால் நம்மை விளையாடவும் அனுமதிக்க மாட்டார்கள்.வீட்டில் இருந்த படி விளையாட முடிந்த விளையாட்டு காகித கப்பல் விடுவது தான்.

என் அம்மா திடீர் என்று மழை வரும் ஒரு நாளில் செய்து குடுத்த வாழைக்காய் பஜ்ஜியின் சுவை அதன் பின் பலமுறை நான் செய்ய சொல்லி கேட்ட போது கிடைக்கவே இல்லை. அது தான் நான் எதிர்பாராமல் கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சயை அறிந்த ஒரு சமயம்.


என் ஆயாவுடன் எங்கள் சொந்த ஊரில் இருக்கும் போது மழை வரும் போது ஓட்டில் இருந்து வடியும் நீரை பிடித்து வைக்க தோணி என்ற ஒன்று இருக்கும்.அதன் கீழ் வாளி(bucket ) வைத்து நீரை சேமித்து வைப்பது அவரது வழக்கம். நான் என் ஆயாவும் அதை பார்த்து கொண்டே இருப்போம். அது நிறைந்தவுடன் அடுத்த வாளி,என்று தொடர்ந்து எடுத்து எல்லா பாத்திரத்தை நிறைத்து விடுவது வழக்கம்.அந்த நீரை துணி தொவைக்க பயன் படுத்துவார். மழை நீரில் துணி துவைத்தால் அழுக்கு நல்லா போகும் என்று அவர் சொல்லுவார்.அன்று என் ஆயா சொல்லாமல் சொல்லி கொடுக்க நினைத்தது மழை நீர் சேமிப்பாய் கூட இருக்கலாம்.


புத்தகம் நனைந்து விடாமல்
அதை சட்டைக்குள் நுழைத்து
நடந்த பள்ளி கூட நாட்கள்...

நான் நனைந்து விடாமல் புத்தத்தை
என் தலையில் ஏற்றி இருந்த கல்லூரி நாட்கள்...

வளர வளர எனது எண்ணங்கள் மாறும் விதத்தையும் உணர்ந்த மற்ற ஒரு மழை நாள் அது.


ஞாபக சாரல் தொடரும் ..

No comments:

Post a Comment

Popular Posts