Showing posts with label சொந்த கதை(சுய புராணம்). Show all posts
Showing posts with label சொந்த கதை(சுய புராணம்). Show all posts

மரத்தின் கைகள்


சற்று நேரம் முன்பு கீழ் வீட்டு பெண்மணி வந்து கதவை தட்டினார் . நமது வீட்டு அருகில் உள்ள இரு மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றார். மொத்தம் 1600 ஆகும் என்கிறார்கள். இந்த மரத்தின் அருகில் வசிக்கும் நாலு வீடும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். "பண பகிர்வை பிறகு பார்ப்போம் .ஏன் மரத்தை வெட்ட வேண்டும்" என்றேன்.. "நிறைய குரங்குகள் வந்து ஆட்டம் போடுகின்றன" என்றார் "மரத்தின் சில கிளைகளை வெட்டுவதால் குரங்கு வராது என எப்படி கூற முடியும். இப்பொது வெட்டி விட்டால் கோடை காலத்தில் கஷ்டம் ". மரத்தை வெட்ட தேவை இல்லை என்றேன். "இல்லை இன்னும் 15 நாளில் பட்ட திருவிழா வருகிறது.. தனது மகன் விட மர கிளைகள் இடைஞ்சலாக இருக்கும் என்றேன். பட்டம் விடுவதற்காக மரத்தை வேண்டுமா" என்று கேட்டேன். அந்த எதிர் கேள்வியை விரும்பவில்லை. நேரடியாக கடைசி கேள்விக்கு வந்தார்.. "உங்களை தவிர மீதி மூன்று வீடும் வெட்டுவதாய் முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் பணத்தை பகிர்ந்து கொள்வீர்களா இல்லையா" என்றார். ஊருடன் ஒத்து வாழ முடிவு செய்து "பணம் வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு பட்டம் விடுவதற்க்காக மரத்தின் கிளையை வெட்ட தேவை இல்லை என படுகிறது. அப்பறம் உங்கள் இஷ்டம்" என்றேன். "பணம் தருவீரகள் இல்லையா..நன்றி" என்று கூறி சென்றுவிட்டார். "முதலில் மரத்தை அறுப்பார்கள்..பிறகு பறவையின் கழுத்தை அறுப்பார்கள்" என்று நினைத்து கொன்டே இந்த ஆண்டு இவ்வாறு முடிந்து இருக்க தேவை இல்லை என்ற சிந்தனையோடு கதவை சாத்தினேன்.

யாம் அறிந்த டிவி தொகுப்பாளர்களிலே



எப்போதும் தமிழர்கள் தமிழை ஒழுங்காக பேசுவதில்லை, ஆங்கிலம் கலந்து அதிகமாக பேசுகிறார்கள்,தமிழில் பேசுவதை இழிவாக கருதுகிறார்கள்  என்ற  குற்றசாட்டு வரும் போது எல்லாம் முதலில் உருட்டப்படும்  தலை டிவி தொகுப்பாளர்கள்.
டிவி தொகுப்பாளர்கள் என்றவுடன் இந்த மியூசிக் சேனலில் விளம்பரத்துக்கும் பாட்டுக்கும் இடையில் வரும் யுவன் யவதி  மனதில் தோன்றிவிடுவார்கள்.இவர்களை திட்ட தோன்றும் நமக்கு நல்ல தமிழ் உச்செரிப்புடன் பேசும் சிலரை பாராட்ட தோன்றுவது இல்லை.இவர்களுக்கு இடையில் அவ்வபோது சில நல்ல தமிழ் உச்செரிப்புடன் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.அப்படி எனக்கு  பிடித்த,என்னை கவர்ந்த சிலரை பற்றி உங்களுடன் சின்ன பகிர்வு..

முதலில் சன் டிவியில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி ஆனந்த கீதன். இவர் சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியின்  தொகுப்பாளர்.இவர் கொஞ்சம் ரபி பெர்னார்ட் சாயலில் இருப்பார்.இவர் கொஞ்சும் தமிழில் பேசுவது மிக கவர்ச்சியாய்   இருக்கும்.ஆண்டுகள் பல கடந்து விட்ட போதும் இவரது தமிழும் முகமும்  நினைவில் இருந்தாலும் இவரது புகை படம் கிடைக்கவில்லை.

அடுத்து லலிதாவின் பாட்டுக்கு பாட்டு B.H ஹப்துல் ஹமீது.

இவர் இலங்கை வானொலியில் பணி புரிந்து ஏற்கனவே புகழ் பெற்று இருந்தாலும் எனக்கு அறிமுகம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் தான்.இவர் நிகழ்ச்சியில் பாட வருவபரின் முகவரியை கூறும் போது "இலக்கம் 14 இன் கீழ் 2 (14/2)" என்று  கூறுவதை பல முறை வியந்து ரசித்து உள்ளேன்.நிகழ்ச்சியின் இடையில் "மணி ஒலித்தது 'க' குறில் என்றாலும் நீங்கள் பாட வேண்டிய எழுத்து 'க' குறில் அல்ல 'கா' நெடில்" என்ற வாசகத்திற்கு நான் கொஞ்சம்(நிறைய) அடிமை.இவர்  குரலில் உள்ள வசீகரம் இன்றும் ஆச்சிரியம் அளிக்கிறது.


அடுத்ததாக நேருக்கு நேர் (நேர்முகம் )- ரபி பெர்னார்ட்


முதலில் சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியின் நேர்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரான ரபி பெர்னார்ட். சில வருடங்களுக்கு முன்பு நேருக்கு நேர் இவர் பேட்டி என்றாலே சரியான சூடு பறக்கும்.
ஆனால் இவர் மிக பொறுமையாக கேள்விகளை கேட்பார். அதுவும் இவரது "இப்போது பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிற செய்திகளை பார்த்தோமேயானால்" என கூறுவது மிக அழகாக இருக்கும். இவரது தமிழ் உச்செரிப்பு மிக அருமையாய் இருக்கும்.

அடுத்ததாக நேருக்கு நேர் வீர பாண்டியன்.



சன் டிவியில் இருந்து ரபி பெர்னார்ட் சென்றதும் இவர் இந்த நிகழ்ச்சியை  தொடர்ந்தார். இவர் ஒரு கேள்வி கேட்கும் போது மிக இலகுவாக சொல்வார்."இது செவி வழி செய்திதான் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை" என்று. இவர் எனக்கு கற்று தந்த புதிய சொற்றொடர் "செவி வழி செய்தி".


அடுத்ததாக நீயா நானா - கோபிநாத்



இவர் முதலில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் தொடங்கி பின் நீயா நானா மூலம் பிரபலம் ஆனவர்.இவர் பேசும் போது அந்த வார்த்தையில் உணர்வோடு பேசவது போல் இருக்கும்.அந்த கால் மாத்திரை ,அரை மாத்திரை அளவோடு பேசுவார் என்று தோன்றுகிறது. இவர் சொல்லும் "மனசு வலிக்கலையா" என்பது நிஜமாய் கொஞ்சம் வலிப்பது போல் தோன்றும்.இவர் சொல்லி கொடுத்த புதிய வார்த்தை "மெனகெடல்" .

இதை எழுதிய பிறகு நானே எனக்கு கேட்டுகொண்ட  கேள்வி.
"இந்த மெனகெடல் தேவை தானா "

மிடில் கிளாஸ் மனசு - 2

எல்லாரும் என்கிட்ட சொன்னாங்க..கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் நீ பதிவு போடவே போறது இல்லைன்னு..அப்ப நான் நினைச்சேன் நம்ப கல்யாணத்தின் போது ஏற்படும் மன அதிர்வை அப்படியே பதிவை போட்டு விட்டா போச்சு இது என்ன பெரிய விசயம்னு.ஆனா இப்ப அதை பத்தி போட வேண்டாம்னு தோணுது. இருந்தாலும் எனது Recepetion அன்று ஏற்பட்ட சின்ன மன அதிர்வலையை இங்கே பதிவு செய்கிறேன்.

எங்களுது திருமணத்தில் கும்பிட்டு கட்டி கொள்ளுதல் என்ற வழக்கம் உள்ளது. அனைவரது காலில் விழ வேண்டும்.பெரியவர் காலில் விழுவது ஒன்றும் தவறு இல்லை என்றாலும் எனது உடல் வாகு கொஞ்சம் இந்த நிகழ்வை தவிர்க்க விரும்பியது.(எனது மனைவி என்னை போலவே குண்டு என்பதால் அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்க வேண்டும் ).ஆனால் இதை திருமணத்தில் தவிர்க்க இயலாது என்பது நான் அறிந்ததே.தவிர்க்கவும் முடியவில்லை. இதனால் இதை Recepetion -இல் செய்ய கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.Recepetion கோபியில் என்பதால் இதை கோபி மக்கள் எதிர் பார்க்கவும் இல்லை. அங்கு இருந்த எங்களது சில உறவினர்கள் இதை எதிர் பார்த்து இருந்தனர் என்பதை நான் அறிந்தேன்.இருந்தாலும் நான் சுனா பானவா இருந்துவிட்டேன். அப்போது எனக்கு ஏழாம் வகுப்பில் இருந்து +2 வரை புத்தகமும் M.Sc வரை நோட் இலவசமாய் குடுத்த சரஸ்வதி டீச்சர் நடக்க முடியாமல் நடந்து வருவது தெரிந்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது இந்த டீச்சர் வந்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்தது. அந்த டீச்சர் என் அருகே வருவதற்கு முன் நான் சென்று அந்த டீச்சரை கை பற்றி அழைத்து வந்தேன். கை தூக்கி விட்ட டீச்சர் மட்டும் அல்ல அவர் நான் என் காலரையும் தூக்கி இருக்கும் படி செய்த டீச்சர்.அவர் எங்களுக்காக கொண்டு வந்த பரிசை திறக்க முற்பட்டார் நானும் அவருக்கு அதை பிரிக்க உதவி செய்ய அது ஒரு சாமி படம். நல்ல பொருத்தமான படம். என்ன படம்னு கேட்காதிங்க..படத்தை பாருங்க..இந்த சமயத்தில் மனதில் மறுபடி ஒரு போராட்டம்.நான் இப்போது இவர் காலில் விழுந்தால் எனது உறவினர்கள் என்னை தப்பாய் நினைப்பார்கள்.என்ன செய்வது..அதற்காக இவர் காலில் விழாமலும் இருப்பது என்பது எனக்கு கஷ்டமாய் இருக்க கூடும்.எப்படியும் இவர் காலில் விழுவது என்று முடிவு செய்து அவரை என் இருக்கை வரை அழைத்து வந்து திரும்பினால் நான் கடன் வாங்கிய எனது உறவினர் ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து சிரித்த படி இருக்கிறார்.அவரில் காலில் விழாமல் என் டீச்சர் காலில் விழலாமா என்று யோசித்த நிமிடத்தில் என் சிந்தனை தகர்த்தது காமெராவின் பிளாஷ். எனது சரஸ்வதி டீச்சர் வழக்கம் போல் என்னிடம் குரு தட்சணை வாங்காமல் நகர்ந்து சென்றார்.நானும் அடுத்த போட்டோவிற்கு போஸ் குடுக்க (வெட்கமில்லாமல்) சிரித்த படி தயார் ஆனேன்.

இது ஒரு மிக பெரிய நிகழ்வு அல்ல.ஆனால் இது போல் நிறைய சின்ன நிகழ்வுகள் நடந்த படியே கழிகிறது நாட்கள். இது ஏன் என்று பதில் நோக்கிய கேள்விகள்..
நான் விரும்பியதை செய்ய முற்படுவதை விட பிறர் விரும்பாததை (விரும்பாதது என்று நான் நினைப்பதை) செய்யாமல் இருபத்திலேயே வாழ்கை கழிந்து விடுமா.
அது மட்டும் இல்லை என் உறவினர்கள் இல்லாவிடில் அவர் காலில் விழுந்து இருக்கலாம் என்று என்னை நானே ஏமாற்றி நல்லவன் போல் கட்டி கொள்கிறேனா என என்னுள் தொடரும் கேள்விக்கு நடுவில் சினுங்குகிறது என் செல்போன்.பேச்சின் தொடகத்தில் முடிந்து போகிறது பதில் தேடும் பயணம்..


 
இந்த பதிவு ஒன்னும் பாவ விமோசனம் இல்லை.இதை வெளிப்படையாய் சொல்லுவதில் ஒரு சின்ன மன நிறைவு.அப்பறம் நான் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு ஒரு பில்ட் அப்.அவ்வளவு தான்

நன்றி பலமுறை சொன்னேன் படிப்பவர் முன்பே...

இது கொஞ்சம் சுய தம்பட்டம் நிறைய நன்றிகள். 

2009 நவம்பர் 10 ,மாலை மணி ஒரு 5 .40 இருக்கும்.அலுவலகத்தில் இருந்து  வீட்டுக்கு செல்ல தயார் ஆகி கொண்டு இருந்தேன்.சரி ஒரு முறை இணையத்தை கொஞ்சம் மேய்வோம் என்று என் நண்பனின் மடிக்கணியை எடுத்து அமர்ந்தேன்.எந்த மின்அஞ்சலும் வரவில்லை.சரி நான் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ஒரு பிரச்சனையான Bulk Orkut Scraps பற்றி search  செய்ய தொடங்கினேன். கிடைத்த பதில் எதுவும் சரியாக தோன்ற வில்லை.ஒருமுறை எனது சீனியர் ஒருவர் சாட்டிங் போது சொன்ன " உங்கள் வகுப்பு தோழர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு blogspot ஆரம்பிகலாம்" என்ற வாசகம் நினைவு வர உடனே  ஒரு டெஸ்ட் ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து வழக்கம் போல் அழகுக்ரிஷ் என டைப் செய்து விட்டேன். அப்போது மணி 6 .30 இருக்கும்.என் உடன் இருந்த பாலாஜி இடம் என்ன பெயர்  வைக்கலாம் என்று கேட்டேன்.நான் எனது டைரியில் முதல் பக்கத்தில் எழுதி உள்ள My foot prints ... சாயலில் வேண்டும் யோசித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பாதையும் பதிவும் என மனதில் தோன்ற அது பாலாஜிக்கும் பிடித்து போக பெயர் சூட்டு விழாவும் முடிந்தது.அன்று காலை எனக்கு தோன்றிய வாழ்த்தா! வழக்கமா? கவிதையை பதிந்து விட்டேன். அந்த கவிதையை  முதலில்  அமைந்து கூட எதேட்சையான ஒரு நிகழ்வு.அப்பறம் எனது ஜூனியர் தினேஷ் ஷங்கர்கு போன் போட்டு கொஞ்சம் ப்ளாக் பற்றி  சீனையும் போட்டு விட்டேன்.இதற்கு முன்னால் நான் ஒரு ப்ளாக்கை கூட படித்து இல்லை.அதுவும் நல்லது தான் ஒரு வேலை முன்பே படித்து இருந்தால் ஆரம்பிக்காமல்  கூட இருந்து இருப்பேன்.எல்லாம் எதேட்சையாக  ஒரு  மணி நேரத்தில் முடிந்து விட்டது.இத போய் இப்ப என்னத்துக்கு நீ சொல்லற என்று கேட்பது எனக்கு புரிகிறது. இன்று  2010 நவம்பர் 11.நேற்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. உங்களில் சிலரை போலவே " Even I don't believe numbers,I believe in time & people "

கடந்த ஒரு ஆண்டில்  பாதையும் பதிவும் ப்ளாக்-ன் பாதையைதை பதிய ஒரு விருப்பம்.இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருந்தாலும் ஒரு சின்ன இளையப்பாறல..கூடவே வருபவர்களுக்கு நிறைய நன்றிகள் சொல்ல தான் இந்த பதிவு.

நான் ஆரமித்த போது என் உடன் இருந்தது அப்பறம் பல பதிவுகளுக்கு பிழை  திருத்தம் செய்த  பாலாஜி,எனது முதல் கவிதைக்கு  முதல் பின்னூட்டம்   இட்டது  மட்டும் அல்லது  பலருக்கு இந்த ப்ளாக் -ஐ   அறிமுக படுத்தி வரும்  தினேஷ் ,சில  பதிவுகளை தட்டச்சு செய்ய உதவிய பத்மநாபன்,எதை பற்றி எல்லாம் எழுதலாம் என்று எனக்கு ஆலோசனை கூறும் பிரசன்னா, வேல் ,முத்துலிங்கம் ,சதீஷ்,அறிவு ,அதியமான்,எதை எழுதினாலும் போன் செய்து வாழ்த்தும் அமீர் ,வெங்கடேஷ்,சிலம்பரசன், ராஜேஷ் அப்பறம்  blog எப்படி எல்லாம் இருக்கலாம் என்றும் சொல்லி வரும் M .செந்தில் மற்றும் G .செந்தில்.கவிதை அதிகமாக எழுதுங்கள் என்று சொன்ன குமார் ,கவிதை அதிகமாக ரசிக்கும் கலை ,V.R .செந்தில் , இவர்கள்  எல்லாம்  நண்பர்கள் மற்றும் ஜூனியர்கள்.இவர்கள் என் மீது அன்பு பாராட்டுவதில் மிக பெரிய வியப்பு இல்லை.
ஆனால் ப்ளாக் என்ற வார்த்தையை எனக்கு முதலில் சொன்னத்து மட்டும் இல்லாமல் தொடர்ந்து படித்து தன் கருத்தை பகிர்ந்து வரும் சீனிச்சாமி சார்,சுரேஷ் சார் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்டு படித்து வரும் தேவன் சார் அவர்களின் அன்பில் தான் நான் இன்னும் கொஞ்சம் செருக்கோடு நடக்கிறேன்.
அது மட்டும் இல்லாமல்  அல்லாமல் ஊக்க படுத்தும் உள்ளங்களில்  இணைந்து உள்ள அண்டோ  ,ஷியாமா ,சிவா, பாலா,செல்வா, ரகு ஸ்ரீராம் ஜகதீஷ்,கோதண்டராமன் ,வசந்தன் ,ஈஸ்வர் என பட்டியல் நீளுவது கொஞ்சம் நெகிழ்ச்சியாய் இருக்கிறது. அமைதியாய் படித்து வரும் ரகு,ராகவ் மற்றும் எனது உறவினர் சிவா ,அண்ணன் ராமு ,வைரம் மற்றும் பலர்  என்னை பாராட்டி  மகிழ்கிறார்கள்.

வேல்முருகன் இதற்காக செய்த உதவி மடிகணினி  கொடுத்ததில்  தொடங்கி, சாப்ட்வேர் சப்போர்ட்,terror திங்கிங், நான் சொல்லும் கவிதையை சகித்து கொள்வது என பட்டியல் மிக நீளமானது.

இதற்காக என் மீது சிலர்  கல் எறியவும் செய்தீர்கள்.அவர்களுக்கு  எல்லாம் ஒரு அன்பு கட்டளை நான்  காய்த்த  மரம் அல்ல வளரும் செடி தான்.





 உங்கள் அனனவருக்கும் நன்றி..
பாதையும் பதிவும் தந்த புதிய நண்பர்கள் அமீரும் & முத்துலிங்கமும்..  

நீங்கள் பாராட்டாத போது நான்
செல்லரித்து  விடவில்லை -ஆனால்
பாராட்டிய  போது நிறைய 
புல்லரித்து போனேன் என்பது நிஜம்..
இதையும் கடந்து  போக தயார் ஆகிறேன்.
Miles to go before I sleep ...

--
With hope & Smile
C.Krishnappan

மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள் - 2

தொடர் பதிவு

"பாதையும் பதிவும்: மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்..."


மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான் தவறவிட்ட ரயிலும் அதனை தொடர்ந்து அன்று இரவு ரயில் நிலையத்தில் தங்க நேர்ந்ததும் இயற்கை(மழை)-க்கு எனது கடிகார முட்களை நகர்த்தும் சக்தி இருப்பதை உணர்ந்த நேரம்..





ராஜமுந்த்ரியில் மழையால் கோதாவரி ஆற்றின் வெள்ளம் நான் இருந்த இடத்திருக்கு பக்கம் வந்து விட்டது.எங்கள் மருத்தவமனையில் வேலை பார்க்கும் ஒருவரின் கடை நிலை ஊழியரின் சிறிய வீட்டிற்குள் கால் வாசி தண்ணீர வந்து விட்டது.வெள்ளம் வநத வீட்டை பார்த்த முதல் அனுபவம் அது .




கபிலனின் எப்போதோ ரசித்து படித்த
"ஏற்கனவே கடனில் மூழ்கிய வீடு
இப்போது வெள்ளத்திலும் மூழ்கியது "
என்ற கவிதை அன்று ஞாபகம் வந்தது.
ஆனால் ரசிக்க முடிய வில்லை.



அதன் பின்பு ஒரு நாள் இரவு குஜராத் கோரஜ்-ல் நான் நன்கு கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தேன்.யாரோ சிலர் "டப டப" என கதவை தட்டி கொண்டு இருந்தார்கள்.எதோ ஒரு அசாதரண சத்தமாய் கேட்டது.கதவை திறக்க எழுந்து நான் எனது காலை கீழ் வைத்து போது நீரில் கால் வைப்பது போன்று இருந்தது.ஏதேனும் நீர் குழாயை அடைக்கவில்லை என்று நினைத்த படியே லைட்டை போட்ட போது தான் தெரிந்தது.எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்து தொலைபேசியும் எங்களது காலணிகளும் சில காதிங்களை போல் நீந்த தெரியாமல் மூழ்கி போய் இருந்தன. அந்த Quarters -இல் இருக்கும் ஒவ்வொரு வீடாய் போய் பார்ப்பதிலேயே அன்றைய இரவு முடிந்து போனது. இல்லை விடிந்து போனது.




சிலரது கார் முழுவதும் நீரில் மூழ்கி போய் இருந்தன.அடுத்த நாள் காலை நாங்கள் வேலைக்கு செல்லும் போது எங்கள் மருத்தவமனையின் முன் வாசல் அருகே ஒரு மருத்துவரது கட்டில் முதல் தட்டு முட்டு சாமான் வரை வைக்க பட்டு இருந்தது.அவர் அருகே நின்று கொண்டிருந்தார். விசாரித்த போது சொன்னார்கள் மருத்துவர்களுக்கு என்று River viewing Quraters சிறப்பு வீடு கொடுக்க பட்டதால் முதலில் வெள்ளம் இவருக்கு தான் முதல் மரியாதையை செய்து உள்ளது.
வெள்ளம் எப்போ வடியும் என்று பார்த்து கொண்டிருந்த அந்த மருத்துவர் ஏனோ எனக்கு ராஜமுந்த்ரியில் கோதாவரி ஆற்றின் வெள்ளம் வந்து பாதிக்க பட்ட என் உடன் பணி செய்த கடை நிலை ஊழியர் போலவே தெரிந்தார்.எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை வெள்ளத்தை போலவே !!

நான் இருக்கும் இடத்தின் அருகே சில மாதங்கள் முன்பு வரை பாலைவனத்தை விட மோசமாக இருந்த இடம் எல்லாம் இப்போது விளைந்த வயல் வெளி போல் காட்சி தருகிறது. இது தான் சினிமா படத்தில் வந்த இரு வெவ்வேறு பாடல் வரிகளை நேரடியாய் பார்த்த தருணம் "மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி " மற்றும் "
"ஒரு விதைக்குள்ள அடை பட்ட ஆலமரம் (செடி) கண் விழிக்கும் பொறு மனமே"

சுருக்கமா சொன்ன மனிதன் தரும் ஞானம் மழையும் தந்தது எனக்கு... பல பருவ காலங்கள் மாறி மாறி வந்தாலும் இந்த மழை காலம் மட்டும் சில மறக்க முடியாத ஞாபகங்களை நம்முள் விட்டு சென்று விடுகிறது.

அவ்வளவு தாங்க.. என்னங்க மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கா...
மழை நின்ற பின்னாலும் மழை கிளையில் தூரல் விழும்னு சொலுவாங்க.. அது போல எனது ஞாபக மழை முடிந்து விட்டது..இப்ப உங்களுக்கு ஞாபக தூறல் தொடங்கி இருக்கும்..

சமீபத்தில்..

நண்பர் ஒருவரின் திருமண அழைப்பிதழை ஒரு முறை படித்து ரசித்தேன் பல முறை ரசித்து படித்தேன்..

இப்போது உங்களுடன் ஒரு பகிர்வு..

Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part II



தொடர் பதிவு பாதையும் பதிவும்: Medical Physicist மருத்தவ இயற்பியலார் - Introduction


கேன்சர் (புற்று நோய்) சிகிச்சையில் ஒரு வகை கதிரியக்க சிகிச்சை முறை.அதாவது இங்கிலீஷ் -ல் சொன்னா Radiation Therapy . நாங்கள வேலை செய்யும் துறையை Department of Radiation Oncology என்று இங்கிலிஷில் சொல்லுவார்கள். இதில் டாக்டர் ,மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட்(நாங்க தானுங்க), டேக்னலாஜீஸ்ட் என்ற மூன்று முக்கியமானவர்கள் இருப்பார்கள்.


இதில் மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட் என்கிற நாங்கள் இரண்டு முக்கிய பணிகளை செய்வோம்.


1 . சிகிச்சைகான திட்ட பணி தயாரித்தல் (Treatement Planning )
2 . சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் (Quality Assurance )


வளர்ந்த நாடுகளில் சிகிச்சைகான திட்ட பணி தயாரித்தல் வேலையை மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட் என்பவரும் சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் வேலையை Dosimetrist என்பவரும் செய்வார்கள்.அது எதுக்கு நமக்கு..நாம நம்ம கதைக்கு வருவோம்..




முதலில் நாம்ப "சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் (Quality Assurance )"வேலையை பற்றி பார்போம்.கேன்சர் (புற்று நோய்) கதிரியக்க சிகிச்சை முறையில் பயன்படும் இயந்திரத்தை வாங்கும் போது எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா என்று பார்க்கணும். அது மட்டும் இல்லாமல் சீரான அல்லது பரிந்துரைக்க பட்ட இடைவெளியில் தொடர்ந்து அந்த இயந்தரம் ஒழுங்கா வேலை செய்யுதா என்று பார்க்க வேண்டும். இயந்தரதின் செயல்பாடு வரையரக்க பட்ட படி இல்லை என்றால் அதை சரி செய்ய பொறியாளரை நாங்கள் அழைப்போம் (கவனிக்க: நாங்கள் பொறியாளர் அல்ல... கதிரியக்க சிகிச்சை முறையில் பயன்படும் இயந்திரத்தை சரி செய்வது எங்கள் வேலை அல்ல...)

எப்படின்னு கேட்டிங்கனா நம்ப டிவி வாங்கும் போது கலர்,brightness ,contrast ,mute ,எத்தனை channel அப்படீன்னு செக் பண்ணி பாக்கறோம் இல்ல அது மாதிரி இதுவும்..அப்பறம் கொஞ்சம் நாள் கழித்து சவுண்ட் சரியாய் கேடகலேன்னா நாம்ப டிவி மெக்கானிக்கை கூப்டற மாதிரி தான்..

நீங்க கேக்கறது புரியுது..ப்ரிச்சனை வந்தா கூப்டலாம்..ஏன் இடையில் சும்மா சும்மா செக் பண்ணி பார்க்கணும் என்று ..


அதாவது நம்ப டிவி ஆடியோ output 500Watts என்று வச்சுகோங்க. நம்ப யாரும் அது 500Watts இருக்கானு செக் பண்ண மாட்டோம்..அப்படியே அது கொஞ்சம் கூட குறைத்து இருந்தாலும் அது ஒரு பிரச்சனை இல்ல.. முதலில் ஆடியோ output 500Watts இருந்து பிறவு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தாலும் நம்ப volume பட்டனை அதிகமாக்கி வர வர காது சரியாவே கேட்க மாட்டேங்குக்துன்னு சொல்லிட்டு ஆடியோ output 0watts ஆகும் வரை வெயிட் பண்ணுவோம். இது நடந்தாலும் அது ஒரு மிக ப்ரிச்சனை அல்ல ..ஆனால் இந்த கதிரியக்க இயந்தரம் தவறு செய்தால் ஒரு நோயாளிக்கு செல்லும் சிகிச்சை தவறு ஆகிவிடும் வாய்ப்பு உள்ளத்தால் இயந்தரம் தொடர்ந்து சோதணைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம்..

நாங்கள் இரண்டு வருடம் படித்ததை இரு பதிவுகளில் பதிந்து விட முடியாது என்பதால்...

மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்...




மேக மூட்டமாய் இருப்பதால் வீட்டுக்கு செல்லும் போது மழை வந்து விட கூடாது என்ற எண்ணத்துடனும் வீடு வந்தவுடன் மழையை எதிர் பார்த்து மழை வந்தால் ரசிக்கும் சராசரி மனிதன் நான்.எனக்கு மழை மீது பெரிய ஆர்வம் இல்லை என்ற போதும் மழைக்கும் எனக்குமான தொடர்பு பல ஆச்சரியத்தையும் அதன் குறித்த பதில்களையும் யோசிக்க வைத்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே பெய்து கொன்டிருக்கும் மழையை ரசித்த படியே மழைக்கும் எனக்குமான உறவை மனம் லேசாய் அசை போட்டது. எனக்குள் பெய்த ஞாபக மழையில் உங்களுக்கு சில சாரல்கள்...



எனது சின்ன வயதில் மிக பெரிய லட்சியம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால் மழை முடிந்து போகிற இடத்தை (நிலபரப்பு) பார்த்து விடுவது .இதற்கான வாய்ப்பு பயணத்தில் மழை வரும் போது மட்டும் தான் கிடைக்கும்.ரயில் பயணம் என்றாலும் சரி அது என் அம்மாவுடன் நான் சென்ற 407 வேன் என்றாலும் சரி மழையின் ஈரம் சாலையில் முடியும் இடத்தை பார்த்து விட முயற்சித்தும் எனது தூக்கம் அல்லது கூட வரும் என் அம்மாவுடனான பேச்சு இந்த இலட்சியத்தை அடைய விடாமல் தடுத்துவிடும்.சற்று நேரத்தில் ஈர நிலத்தில் இருந்து சாதாரண நிலம் வந்து விடும் போது இன்றும் தோத்து விடோம் என்ற உணர்வு ஒட்டி கொள்ளும். அது மட்டும் அல்லாது மழை வரும் இடத்தை நாம் கடந்து விட்டோமா அல்லாது மழை வருவதின் செறிவு குறைந்து மழை இங்கு பெய்ய வில்லையா என்ற கேள்வி தொத்தி கொள்ளும்.

இப்போது போலவே நான் சின்ன பையன் இருந்த போதும் மழை வரும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள்.பெரும்பாலும் இந்த மழை காலையில் வராது. அப்படியே வந்தாலும் பள்ளி செல்லும் நேரத்துக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி நின்று விடும்.(இப்ப கூட அப்படி தான் ) சாயங்காலம் தான் அதிகமாக வரும் அதனால் கடைசி இரண்டு பிரிவுகள் (peroids) மட்டும் குறைத்து அனுப்பி விடுவார்கள்.மழை காரணமாக மைதானம் ஈரமாய் இருப்பதால் நம்மை விளையாடவும் அனுமதிக்க மாட்டார்கள்.வீட்டில் இருந்த படி விளையாட முடிந்த விளையாட்டு காகித கப்பல் விடுவது தான்.

என் அம்மா திடீர் என்று மழை வரும் ஒரு நாளில் செய்து குடுத்த வாழைக்காய் பஜ்ஜியின் சுவை அதன் பின் பலமுறை நான் செய்ய சொல்லி கேட்ட போது கிடைக்கவே இல்லை. அது தான் நான் எதிர்பாராமல் கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சயை அறிந்த ஒரு சமயம்.


என் ஆயாவுடன் எங்கள் சொந்த ஊரில் இருக்கும் போது மழை வரும் போது ஓட்டில் இருந்து வடியும் நீரை பிடித்து வைக்க தோணி என்ற ஒன்று இருக்கும்.அதன் கீழ் வாளி(bucket ) வைத்து நீரை சேமித்து வைப்பது அவரது வழக்கம். நான் என் ஆயாவும் அதை பார்த்து கொண்டே இருப்போம். அது நிறைந்தவுடன் அடுத்த வாளி,என்று தொடர்ந்து எடுத்து எல்லா பாத்திரத்தை நிறைத்து விடுவது வழக்கம்.அந்த நீரை துணி தொவைக்க பயன் படுத்துவார். மழை நீரில் துணி துவைத்தால் அழுக்கு நல்லா போகும் என்று அவர் சொல்லுவார்.அன்று என் ஆயா சொல்லாமல் சொல்லி கொடுக்க நினைத்தது மழை நீர் சேமிப்பாய் கூட இருக்கலாம்.


புத்தகம் நனைந்து விடாமல்
அதை சட்டைக்குள் நுழைத்து
நடந்த பள்ளி கூட நாட்கள்...

நான் நனைந்து விடாமல் புத்தத்தை
என் தலையில் ஏற்றி இருந்த கல்லூரி நாட்கள்...

வளர வளர எனது எண்ணங்கள் மாறும் விதத்தையும் உணர்ந்த மற்ற ஒரு மழை நாள் அது.


ஞாபக சாரல் தொடரும் ..

Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part I


சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது
அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று...
அந்த உரையாடல் கீழே இதோ

நான்:மெடிக்கல் ப்ய்சிசிஸ்ட்

என் உறவினர்:அப்படினா என்ன வேலை..கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுபா..

நான்:(ஆரமிபிச்சுடாங்காய ஆரமிபிச்சுடாங்க என்று நினைத்த படியே)கான்சர் நோயாளிகளுக்கு radiation -ல் எப்படி ட்ரீட் பண்றதுன்னு நாங்க பிளான் பண்ணுவோம்.

என் உறவினர்: ஒன்னும் வெளங்கலையே...என்னமோ பெரிய படிப்பு பெரிய வேலைன்னு சொன்னங்க..ஆனா நீ என்னடானா என்ன படிச்சேன் கூட சொல்ல தெரியாம தடுமாற..இந்த காலத்து பசங்களுக்கு எதையும் பட்டுனு சொல்ல தெரியல..

நான்: அதாவது கான்சர் வந்தா radiation இல்ல!! இல்ல!!(அவருக்கு புரிய வேண்டும் என்று) கரண்ட்டு குடுப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா..அதுல...

என் உறவினர்: (என்னை இடை மறித்து) ஆமா ஆமா நம் முத்துசாமிக்கு கூட முப்பது நாள் போய் கரண்ட்டு வச்சாங்க..அந்த கரண்ட்டு வைக்கிற வேலைன்னு சொல்லு.

நான்: இல்லைங்க அவங்க எங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் Technologist. நாங்க அவங்களுக்கு எவ்ளவு நேரம் radiation இல்ல இல்ல கரண்ட்டு,அப்பறம் அந்த கரண்டை எப்படி குடுக்கணும்னு சொல்லுவோம்.
என் உறவினர்: அப்பா நீ டாக்டரா..


நான்:(இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைத்து படி) இல்லைங்க டாக்டர் எங்களுக்கு கரண்டை எங்க எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுவாங்க..நாங்க கரண்டை எப்படி எவ்வளவு நேரம் கொடுக்கணும்னு டாக்டர்-க்கு அச்சிஸ்ட்(assist) பன்னுவோம்.

என் உறவினர்: அட டாக்டர்க்கு அச்சிஸ்ட்டன்ட் அப்படினா கம்பவுண்டர்னு சொல்லு..

நான்: இல்லைங்க நாங்களும் டாக்டர் மாதிரி தான் ஆனால் டாக்டர்க்கு கொஞ்சம் கீழ்.. புரிஞ்சதுங்களா...

என் உறவினர்: லைட்டா புரிஞ்சது...முழுசா புரியல..

நான்:அப்பாட லைட்டாவது புரிஞ்சதே..

என் உறவினர்:நீ மினி டாக்டர் வேலை பாக்கிற...கரெக்டா ..

நான்: கரெக்ட்டு தான் ஆனா...

என் உறவினர்: என்ன ஆனானு இழுக்ற..எதாவது தப்புனா சொல்லுபா

நான்:(மறுபடியும் முதல் இருந்தா என்று பயந்து) இல்லங்க கரெக்ட் தான்..ரொம்ப கரெக்ட் என்றேன்.

பின் குறிப்பு: மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிச்ச நாங்க ஒரு உண்மை சொல்லி ஆகணும்...
நாங்க மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிக்க பட்ட கஷ்டத்தை விட என்ன படிச்சோம்னு மத்தவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க ரொம்ப கஷ்ட படுறோம்.


இருந்தாலும் தொடர் பதிவின் மூலமாக Medical Physicist என்னவென்று சொல்லியே தீருவேன்.அதுக்கு அப்பறம் யாராவது நீ என்ன படிச்சு இருக்காய் என்று கேட்டால் கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் பதில் சொல்லுவேன்

சில்லறை பசங்க

நான் ஊரு சென்று இருந்த போது நடந்த ஒரு சம்பவம்.
நான் என் அம்மா மற்றும் என் நண்பர் மூவரும் கோவையில் ஒரு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம்.அது ஒரு மிதவை பேருந்து.(அதாங்க காசு மட்டும் அதிகமாக வாங்குவாங்க இல்ல அந்த வண்டி தான்).எங்கள் முன்பு இருந்தவர்கள் எல்லாம் சரியாக பத்து பத்து ரூபாயை நீட்டினார்கள்.நடத்துனரும் எல்லாரிடமும் இருந்தும் பத்து ரூபாயை வாங்கி போட்டு கொண்டு ஒரு பயண சீட்டை கிழித்து கொடுத்த படியே எங்கள் அருகில் வந்தார்.சராசரி வண்டியில் நாங்கள் போக வேண்டிய இடத்திருக்கு ஒரு மூன்று ரூபாய் இருக்கும்.அந்த மிதவை பேருந்தில் எவ்வளவு காசு என்பது தெரியாததால் என் நண்பர் இரண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.அந்த நடத்துனரும் வழக்கம் போல் இரண்டு பத்து ரூபாய் நோட்டை வாங்கி போட்டு கொண்டு மூன்று பயண சீட்டை கிழித்து கொடுத்தார்.நாங்கள் பார்த்த பொழுது தான் தெரிந்தது.ஒரு பயண சீட்டின் விலை ஒன்பது ரூபாய் என்று. நாங்கள் கொடுக்க வேண்டியது 27 ரூபாய் கொடுத்ததோ 20 ரூபாய் என்று உடனே நாங்களும் அந்த நடத்துனரை அழைத்து மீண்டும் ஒரு பத்து ரூபாயை கொடுத்தோம்.அவரும் அதை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவருக்கு மீதி மூன்று ரூபாய் குடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாய் தெரியவே இல்லை.எனக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது.உடனே நானும் மீதி தாருங்கள் என்று கேட்டு விட்டேன்.அவரும் என் அருகே வந்து ஒரு இரண்டு ரூபாயை குடுத்து விட்டு வேகமாக நகர்ந்தார்.நாங்கள் நினைத்து இருந்தால் அந்த 10 ரூபாயை கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.நாங்கள் நேர்மையாக இருந்தும் அவர் சில்லறையை முழுமையாக கொடுக்க மறுப்பது எனது கோபத்தை அதிக படுத்தியது.நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பு என் அம்மாவிடம் உள்ள பர்சில் இருந்து சில்லறைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து அந்த நடத்துனரிடம் சண்டை போட தயார் ஆகி கொண்டிருந்தேன்.என் அம்மாவிற்கு இது தெரிந்து விட்டது பிறகு என் அம்மாவும் என் நண்பனும் கோவில் செல்லும் போது சண்டை போடாதே மனசு நிம்மதியாய் இருக்காது என்றனர்.நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட்டது.மனசு நிம்மதியாய் இருக்கட்டும்(அவர்கள் மனசு) என்று நான் சண்டை போடாமல் இறங்கி விட்டேன்.பஸ்ஸை விட்டு இறங்கியதும் வெயில் பட்டு என் உடலும் கொஞ்சம் சூடானது.


சில்லறைக்காக சில்லறை தனமாய் சி(ல்)ல(றை) பசங்களோட சண்டை போட மனம் இல்லாததால் அதன் பிறகு தமிழகத்தில் சென்ற பஸ் பயணத்தில் எல்லாம் நான் கொஞ்சம் சில்லறையை சுமந்த படி திரிந்தேன்.உங்களில் சிலருக்கு சண்டை போட்ட நான் கூட ஒரு சில்லறை பையன் போல் தெரியலாம். அது உங்கள் தவறு இல்லை.கண்டிப்பான முறையில் என் தவறும் இல்லை...

(அப்பாட எப்படியோ பதிவின் மூலம் கோபத்தை கொஞ்சம் வெளி படுத்தியாச்சு..)
(குறிப்பு:புகை படத்தில் இருக்கும் நடத்துனர் இணையத்தில் எடுத்தது.இவருக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பதம் இல்லை )

நெஞ்சத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்...

நட்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் எல்லார் மனதிலும் சில முகங்கள் தோன்றி மறையும்.
நட்புக்கு இலக்கணமாய் அதியமான் அவ்வை நட்பு,கிருஷ்ணர் குசேலர் நட்பு என்று சில பழங்கதைகளும் நமக்கு சொல்லபடிருக்கு.பழங்கதைகளை திருப்பி சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பலை..என் கதைய சொல்லறேன் கேளுங்க..(யாரு பா அது அதுக்கு பழங்கதையே பரவா இல்லைங்கறது).
என் கூட வேலை பார்த்த எல்லாரையும்,என் கூட படிச்ச எல்லாரையும் நண்பன் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.Colleague,Classmate அப்படினு இது வரை பிரித்து கூப்பிட்ட தில்லை.நண்பன் என்ற அடைமொழியோடு பல பேரு கூட நட்பில்லாமல் இருக்கேன்.சில பேரு கிட்ட மட்டும் தான் நட்பு கொண்ட நண்பனாய் இருந்து இருக்கேன்.இருந்தாலும் பாருங்க அவங்க கிட்ட கூட இந்த மாதிரி சில சம்பங்கள் நடந்து இருக்கு.
என் டீம்ல விளையாடும் என் நண்பன் அவுட் ஆகும் போது ஒரு சந்தோசம் அடுத்து நான் பேட்டிங் பண்ண போறேன்னு.
என் உடனே எப்பவும் படித்த இன்னொரு நண்பன் பரிட்சைல அஞ்சு மார்க்கு அதிகம் வாங்குன போது ஒரு பொறாமை.


நாங்க ரெண்டு பேரும் சைட் அடிச்ச பொண்ணு அவன் கிட்ட மட்டும் வந்து பேசும் போது ஒரு வயிற்று எரிச்சல்
அப்பறம் ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு விசயங்களை மறைத்து வைக்க முற்படுவது
அப்படீன்னு பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

நான் கூட இவங்க கிட்டவும் நட்பு இல்லையோனு தான் முதலில் நினைத்தேன்.பிறகு தான் எனக்கு புரிந்தது இது எல்லாம் எப்படினா..பேருந்தில் நமக்கு புடிச்ச சன்னல் ஓர இருக்கையை மழை காலத்தில் ஒதுக்கிற மாதிரி தான்.அதுக்கு நாமும் காரணமில்லை அந்த இருக்கையும் காரணமில்லை.. எப்படி இருந்தாலும் சன்னல் ஓர இருக்கையை மீதான ஒரு ஆசை நமக்கு குறைய போவது இல்லை.அது போல தான் நட்பு கூட...

என்றும் நட்புடன்
கிருஷ்ணப்பன்

குஜராத் 4 நாட் அவுட் - 2

குஜராத் 4 நாட் அவுட்-இல் முதலில் யாரை பற்றி,எதை பற்றி எழுதலாம் என்று எண்ணி கொண்டிருந்த பொழுது எனக்கு சட் என்று ஞாபகம் வந்தது இவர்கள் தான்.இந்த பதிவு ஒரு நன்றி உணர்வுடன் பதிய படுவது என்பதால் கொஞ்சம் போர் அடித்தால் பொறுத்து அருள்க

ஒருவர் நான் முன்பு வேலை இருந்த Goraj-il என் வீட்டில் வேலை செய்த வேலைக்கார அம்மா பார்வதிபென் மோஷி(மோஷி அப்படினா ஹிந்தியில் வயதான அம்மாவை குறிப்பது).



அவர் எங்கள் வீட்டில் சர்வ வேலைகளையும் செய்வார்.நாங்கள் இரவு (கவனிக்க) தான் செல்வோம்.சமைப்போம்.சாப்ட்டு படுத்ருவோம்.காலை கிளம்பி வேலைக்கு சென்று விடுவோம்.அவ்வளவு தான் .நாங்க சமையல் செய்த அறையை பார்த்தா எங்களுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.ஆனால் மீண்டும் இரவு வந்தால் வீட்டில் எல்லாம் சுத்தமா இருக்கும்.அது மட்டும் இல்லை.எங்கள் எல்லார் மீதும் அவர் வச்சு இருந்த பாசம் பற்றி வார்த்தையால சொல்ல இயலாது.எங்களுக்கு முன்பு இருந்த எங்கள் சீனியர் ஒருவர் கூட தான் ராஜினாமா செய்து போகும் போது இந்த மோஷியை தன் குடும்பத்தோடு வந்துவிடுமாறு கேட்டு உள்ளார்.மோஷி தான் மகனை விட்டு வர முடியாது என்று மறுத்து விட்டாராம்.ஒரு முறை எங்கள் நிர்வாகம் அவரை வேறு ஒரு Quarters-க்கு மாற்றி விட்டனர்.பின்பு நாங்கள் அனைவரும் அவரே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு போராடி (ஒரு கீழ் சாதி காரர் ஒருவருகாக நீங்கள் ஏன் பரிந்து வர்றீங்க என்று கேட்ட நிர்வாகத்தை மீறி) திரும்ப பெற்றோம்.ஒரு முறை என் நண்பனின் அம்மா வந்திருந்தார்கள்.அவர்கள் இருந்தது ஒரு மாதம் தான் என்றாலும் திரும்பி போன போது மோஷி அழுதுவிட்டார்.



அதனால் நாங்கள் அங்கிருந்து ராஜினாமா செய்தவதை கடைசில் தான் அவருக்கு சொல்வது என்று இருந்தோம்.ஆனால் அவர் அதை முன்பே கண்டு பிடித்து அழ தொடங்கி வீட்டார் . இறுதியாய் என் நண்பன் அவரை பற்றி சொன்ன இரு வாசகம் இதோ,எனது ஜீன்ஸ் இப்ப தான் நான் வாங்கும் போது இருந்த கலர்ல இருக்கு எங்க அம்மா கூட கை வலிக்குதுன்னு கொஞ்சம் நல்லா துவைக்க மடாங்கனு.அவன் சொன்ன மற்றொன்று,ஒரு முறை யாரோ உனக்கு எப்படி மனைவி வேண்டும் என்று கேட்டதுக்கு இந்த மோஷி மாதிரி மனசும்,வேலையும் செய்ற பொண்ணா வேணும் என்றான்.அந்த மோஷியை சமிபத்தில் பார்த்தேன் .

அவர் கண்கள் கொஞ்சம் ஒளி இழந்து இருக்கிறது.நிறைய உழைத்து உழைத்து கலைத்தது உடம்பில் தெரிந்தது.இருந்தாலும் இன்னும் உழைத்து கொன்ன்டிருகிறார்.(நம்ப முதல்வர் மாதிரி குடும்பதுக்க்காக)


அதே போலவே நான் ராஜ்கோட் சென்ற போது என் நண்பன் கோதண்டராமன் வீட்டு வேலை கார அம்மா(பெயர் தெரியாது)என் நண்பனிடம் சொன்னார் நீங்கள் துவைக்க போடும் துணி மிக குறைவாக உள்ளது.அதனால் நீங்கள் குடுப்பதில் இருந்து மாதம் 50 ரூபாயை குறைத்து கொள்ளுங்கள் என்றார்.நான் பார்த்து சம்பளம் குறைக்க சொல்லி கேட்ட முதல் வேலையாள் இவராய் தான் இருப்பார்.

அது போலவே இப்போ எங்கள் மருத்துவமனையில் உள்ள ஹேமலதாபெண் என்ற பணி பெண் எங்கள் தேவையை அறிந்து தேநீர் குவளைகளை தந்து கொண்டே இருக்கிறார்.

இந்த குஜராத் மாநிலம் தேச பிதாவுக்கு பெயர் பெற்றது என்றாலும் நிறைய கஸ்தூரி பாய் போன்ற தேச மாதா-களாலும் நிறைந்து உள்ளது.(எவரையும் வாஞ்சையோடு கவனித்து கொள்ளும் எவரும் மாதா தானே).

நம்பை சுற்றி சில மாதாக்கள் எப்பவும் இருக்க கூடும்.நான் இப்பொது எல்லாம் அவர்களை கவனித்து அவருக்கு குறைந்த பட்சம் அவவ்போது ஒரு நன்றியை மட்டுமாவது சொல்லி வருகிறேன்.

GLOBAL WARM(N)ING - 2

இந்த வருடம் அகமதாபாத் வெட்பம் பற்றிய ஒரு சிறிய செய்தியும் ஒரு சிரிப்பு ரீமிக்ஸ் பாடலும் உங்களுக்காக


செய்தி:(நன்றி: Times of India for News)

Ahmedabad: Tuesday brought some relief to people across the state with the mercury settling at a maximum of 45 degrees Celsius in Idar, Ahmedabad and Vadodara. It, however, saw an eight year old record being broken as Ahmedabad completed a ‘consistently hot’ week in which the maximum temperature continued to be as high as 45 degrees Celsius or above.

Kamaljit Ray, director of India Meteorological Department (IMD), Gujarat, said, “This the longest duration of mercury touching 45 degrees Celsius and above in Ahmedabad and continuing heat wave conditions. This phenomena last happened in the city in 2002.”
Whole state has been reeling under excessive heat wave conditions for one week, Ray said, adding, “This started on May 19 and have persisted since then. There has been little or no drop in the temperature which in Ahmedabad has remained above four degrees Celsius.”

Four more die of heat at AMC-run hospitals on Tuesday, taking the heat death toll in city to 38. Deputy health officer Bhavin Solanki said, “On Tuesday, 66 patients were admitted to AMC hospitals.”
சிரிப்பு ரீமிக்ஸ் பாடல்:(நன்றி:Pasanka film Song)
ஒரு வெட்பம் வருதே வருதே
பெரு அச்சம் தருதே தருதே
உடல் எங்கும் அனல் பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் எனதா
புது துன்பம் தீ மூட்டுதே - வீடு
போக சொல்லி கால்கள் தள்ள
AC யில் இருக்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடரிந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் ரணமே

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
வெயில் என்னை துண்டாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் எனதா
புது துன்பம் தீ மூட்டுதே - நான்
கேட்டு வாங்கி கொண்ட இன்பம் இன்று
எனை கூறு போட்டு கொள்ளும் துன்பம்
பர பர பர எனவே துடி துடி துடி மனமே
வர வர கரை தாண்டிடுமே...

அன்பு தாய்மார்களே,

அன்பு தாய்மார்களே,

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தை வழக்கம் போல் அபாகஸ், கம்ப்யூட்டர் , பாட்டு,ஸ்விமிங், செஸ் என்று ரொம்ப பிஸியாக இருக்கும். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.இல்ல இல்ல நீங்க நினைக்கிற மாதிரி, உங்கள் குழந்தைகளை இந்த மாதிரி கிளாஸ்-கு அனுப்பாதிங்கனு சொல்லமாட்டேன்.ஏன்னா உங்கள் குழந்தை எவளவு stress தாங்குவாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும். நம்ப விஷயத்துக்கு வருவோம் ..
என்ன விசயமுனா.. தப்பா நினச்சுகாதிங்க.. அப்படியே உங்கள் குழந்தைகளை தமிழ் கிளாஸ்-கும் அனுப்பி வைங்க..
இப்ப நிறைய குழந்தைகள் எனக்கு வராத சப்ஜெக்ட் கணக்குனு சொல்லறதில..தமிழ்னு தான் சொல்றாங்க.இப்பவே நிறைய பேர் (இளைஞர்கள்) எனக்கு தமிழ் எழுத வராதுனு சொல்ல ஆரம்பித்து விட்டனர்.



கிராமத்து மக்கள் ஆங்கிலம் படிக்க ஆசை படுவது போல நகர குழந்தைகளை தமிழ் படிக்கும் ஆசையை உண்டு பண்ணுங்க.எங்க தமிழ்-க்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு.. அது எப்படி முடியும்னு யோசிக்காதிங்க.
தினசரி தாட்களை கொஞ்சம் படிக்க சொல்லலாம்.
அதுல இருக்கறது தமிழான்னு நீங்க கேக்குறது எனக்கு தெரியுது.
இல்லாட்டி இப்படி கூட பண்ணலாம். ஒரு சின்ன அனுபவம் உங்களுக்காக..



எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.என் சின்ன வயதில் எல்லா விடுமுறை நாட்களிலும் (சனி +ஞாயிறு உட்பட ) எங்கள் மாமா எங்களை க ,ங,ச ஞ.....என்ற வரிசையிலும் க,கா,கி,கீ...என்ற வரிசையிலும் எழுத சொல்ல்வார்கள். அதன் பிறகு 25 வார்த்தைகள் டிக்டேஷ்சண் வைப்பார். அதில் 18 -க்கு மேல் வாங்கினால் அன்று விளையாட போகலாம்.இல்லாவிடில் மீண்டும் ஒரு டிக்டேஷ்சண் தொடரும்.அதிலும் 18 -க்கு குறைவு என்றால் அடுத்த ஒரு முறை க ,ங,ச ஞ.....என்ற வரிசையிலும் க,கா,கி,கீ...என்ற வரிசையிலும் எழுதி விட்டு நாங்கள் விளையாட செல்லலாம்.இதே முறை தான் எங்கள் எல்லா உறவினர் வீட்டிலும்.இதை பின்பற்றிய எல்லாருடைய தமிழோடு கையெழுத்தும் நன்றாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. இதயே பின்பற்றுங்கனு சொல்லல..இதுவும் ஒரு வழி அவ்வளவுதான்.

தமிழை ஒரு பொழுது போக்கு கல்வியா படிக்க சொல்லுங்க.. நான் சொல்லறது ரொம்ப சிம்பிள்..அதாவது வருஷம் புல்லா படிக்க வேணாம்... சம்மர்ல மட்டுமாவது...

குஜராத் 4 நாட் அவுட்

மே 1
என்றவுடன் நினைவுக்கு வருவது உழைப்பாளர் தினம்.
அது மட்டும் அல்ல . 1960,மே 1 -இல் குஜராத் மகாராஷ்டிரா என இரண்டாக பிரிந்தது. இது நடந்தது 50 வருடம் ஆகி விட்டது. அதனால் குஜாரத்தில் "குஜராத் 50" என்று இந்த ஆண்டு கொண்டாடினர். சரி நம்ப கதைக்கு வருவோம்.

நான் குஜராத் வேலைக்கு வந்ததும் இந்த நாளில் (மே 1 ) தான். நான் இங்கு வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குஜராத்தி பேச தெரியாது.(யாருடா அது ஹிந்தி மட்டும் பேச தெரியுமானு கேக்கறது..என்னோட மனசாட்சி தான பொழச்சு போ).இந்த படத்தை பார்த்த ஏதோ என் 5 வது ஆண்டு தொடக்கத்தை சொல்லற மாதிரி இருக்கு இல்ல..

ரொம்ப நல்ல ஊருங்க.. நல்ல மக்கள்..வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு மாதிரி தான் இந்த குஜராத் கூட.காந்தி பிறந்த மண்ணு , அவர் படித்த ஸ்கூல் , மது விலக்கு, IIM ahmedabad ,சோமநாத் கோவில், கிருஷ்ணர் கால் பதித்த தவ்ரக்ஹா, சுரத் சேலை & வைரம் , குஜராத் NRI ,குஜராத் மக்கள் மனசு,அவர்களின் ஷேர் மார்க்கெட் investments , அடுத்த ஸ்டேட் மக்களை ட்ரீட் பண்ணு விதம்
இப்படி எவ்வளவோ விஷயம் குஜராத் பத்தி எழுதனும்னு தோணுது
ஆனா நெறய டைப் பண்ண பண்ண கை வலிக்குது
எனக்கு வர இந்த கை வலி தானா ஆறிடும்.
ஆனா அத படித்து உங்களக்கு வரப்போற வலியை நினைக்கும்
போது டைப் பண்ண வர கை தானா நின்னுடுது.

அதானல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களுக்காக
குஜராத் 4 நாட் அவுட் தொடரும்

விமானம் TAKE OFF

நடுத்தர வர்க்க மனிதாகளின் கனவுகளில் முக்கியமாக ஒன்றாக விமான பயணம் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. உலகமயமாதலும் தனியார்மயமாதலும் இந்த கனவை "வான் (வழி பயணம்) கூட கை தோடு தூரம் தான்" என மாற்றி உள்ளது.
நான் பிறந்தது & "என் ஊரு மதுரை பக்கம்" என்றாலும் வளர்ந்தது எல்லாம் அனைத்து கோபியில் தான்.கோபியில் புகை வண்டியை பார்பதற்கே நான் பேருந்தில் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் அதுவும் விமானம் பார்க்க வேண்டும் என்றால் பல மணி நேரம் புகை வண்டியில் பயணிக்க வேண்டும் என்ற சூழ்நிலை.என் சிறு வயதில் சென்னையில் என் உறவினர் விட்டில் இருக்கையில் விமானங்கள் பறக்கும் போது மொட்ட மாடிக்கு ஓடி போயி "டா டா" காட்டும் வண்டு பைனாக தான் நானும் இருந்தேன்.

விமானத்தில் பயணம் சென்று வருகிறேன் என்று "டா டா" காட்டியது முதன் முதலில் செப்டம்பர் 2007 -இல் தான்.நான் பரோடாவில் இருந்தாலும் நிதி நிலையை கருத்தில் கொண்டு மும்பை வரை புகைவண்டியிலும் அப்பறம் மும்பை டூ சென்னை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் செல்ல ஆயுத்தமானேன்.முதல் முறை செல்ல போறேன் என்பதால் விமான நிலையத்தின் நடை முறைகளை என் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.என் நண்பர்களும் என்னை அவ்வளவு தயார் செய்தனர்.காலை ஆறு மணிக்கே விமான நிலையம் அடைந்து விட்டேன்.எல்லா நடைமுறைகளையும் ஏற்கனவே கேட்டு இருந்தாலும் அது எதையும் நான் பின்பற்ற வில்லை. அங்கு சற்று முற்றும் பார்த்து எனக்கு முன் இருந்தவர்களை அப்படியே காப்பி அடித்தேன்.போர்டிங் பாஸ் வாங்கும் இடத்தில அந்த ஆண் உங்களுக்கு எந்த இருக்கை வேணும் என்று கேட்க "அட எதாவது கொடுப்பா" என்று சொல்லி போர்டிங் பாஸ் வாங்கி செக்குரிட்டி செக் எல்லாம் முடிக்க மணி 6 .45 ஆகி விட்டது .விமானம் 9 மணிக்கு தான்.எல்லாரையும் போலவே அங்கு வைத்து இருந்த ஒரு தினசரி நாளிதழையும் நானும் எடுத்து கொண்டேன்.எனக்கு முதல் பயணம் என்று யாரும் அறிந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.நேரம் செல்ல செல்ல பசி எடுக்க தொடங்கியது.பசி அதிகமாக இருக்கவே ஒரு காபி + ஒரு பப்ஸ் சாப்பிட முடிவெடுத்து அந்த கடையில் காபி முதலில் வாங்கி எவ்வளவு என்று கேட்காமல் 100 ரூபாயை எடுத்து நீட்ட அவன் 50 ரூபாயை திருப்பி தந்து THANK YOU என்று சொன்னவுடனே ஏதோ பசி அடங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டதால் பப்ஸ் -கு பாய் சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன்.விமானத்தில் ஏற அழைத்ததும் நான் சென்று ஏறியவுடன் தான் தெரிந்து எனக்கு சன்னல் ஓர இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று.முதலில் தண்ணீர் பாட்டில் குடுத்தார்கள்.நான் வாங்கவே இல்லை.காசு கேட்பார்களோ என்ற பயம் தான். விமானம் பறக்க தயார் ஆனது. அங்கு இருந்த பணி பெண்கள் பயணத்தின் போது தெரிந்து கொள்ள வேண்டிய சமிக்கைகளை செய்து காட்ட ஆரம்பித்தனர். எனக்கு எதோ எல்லாம் ஏற்கனவே தெரிந்து போல் (எனக்கு முதல் பயணம் என்று யாரும் அறிந்து விட கூடாது என்பதால் ) கவனமில்லாமல் கவனிப்பது போல் மிக கவனமாக கவனித்தேன்.

விமானம் பறக்க தொடங்கியதும் பெரிய சந்தோசமும் அதே அளவு ஒரு பயமும் தொற்றி கொண்டது.இருந்தாலும் சுனா பானவா maintain செய்தேன்.விமானம் take off ஆகிறது...
அடுத்த பதிவில் விமானம் landing ஆகும்...

கிருஷ்ணா, தமிழில் டைப் செய்ய கஷ்டமாக இல்லையா??

குழந்தை நடக்கும் பொழுது தவறி விழுந்தால்...
பார்க்க கஷ்டமாக தான் இருக்கும் உங்களுக்கு ...
ஆனால் வலியோடு அது உற்சாகமாய் எழுந்து நடக்கும்...
உங்கள் கை தட்டலுடன்..



குழந்தை தப்பு தப்பாய் பேசுகையில்
நீங்கள் மழலை என்று பொறுத்து
கொள்வதும் ரசிப்பதும் அதன் பேச்சை வலுவாக்கும்...

ஷீரடி பயணம்

ஹைதராபாத்தில் இருந்து நண்பர்கள் திரு , கதிர், இளங்கோ, தமிழ்செல்வன் நான்கு நண்பர்கள் 13.02.2010 அன்று மகாராஷ்ட்ராவில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவில் வருவதாக இருந்தனர்.குஜராதில் இருந்து நான் என் நண்பன் வேல் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.பயணம் கடைசி 5 நாளில் முடிவு செய்யபட்டது.அதற்கு அருகில் இருந்த சனி சிங்கப்பூர் (அதாங்க Bajaj Discover DTSi விளம்பரம் வருமே கதவு இல்லாத இடம்னு -அது எல்லாம் பொய்) கோவிலுக்கும் சென்றோம்.இருவரும் 13 .02 .2010 இரவே திரும்பிவிட முடிவு செய்து இருந்தாலும் நாசிக் அருகே இருந்த ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறியதால் 14 .02 .2010 அன்று அங்கும் சென்று வந்தோம்.









இந்த பயணத்தில் கண்ட மூன்று விஷயங்கள் உங்களுடன் இங்கே:

1 .நாங்கள் ஷீரடி சாய் பாபா கோவிலில் காத்திருந்த நேரம் 9 am to 1pm -4 Hrs
சனி சிங்கப்பூர் கோவிலில் காத்திருந்த நேரம் 4.30pm to 6pm -1.5 Hrs
நாசிக் ஜோதிரலிங்கம் கோவிலில் காத்திருந்த நேரம் 10.30am to 2 pm - 4.5 hrs

எந்த ஒரு கோவிலிலும் சிறப்பு தரிசனம் இல்லை.தமிழகத்தில் சின்ன கோவில்களில் கூட சிறப்பு தரிசனம் உண்டு. அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பன்னாரி அம்மன் கோவிலில் Rs.10/-, Rs.25/-, Rs.50/- Rs.100/- என்று பார்த்த எனக்கு கொஞ்சம் அச்சிர்யமாக இருந்தது.கடவுள் முன்பு எல்லாரும் சமம் என்பது மீண்டும் யாரோ சொன்னது போல ஒரு உனர்வு.

2 .நாங்கள் நாசிக் நகரில் ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவில் முடித்தவுடன் அங்கு உள்ள மற்ற 9 இடங்கள் பார்க்க ஒரு ஆட்டோ எடுத்து கொள்ளுமாறு எங்களது கார் டிரைவர் சொன்னார். நாங்களும் ஒரு ஆட்டோ எடுத்து கொண்டு சென்றோம்.
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கூட இல்லை. 9 கோவில்கள் முடிந்தது என்றான் அந்த ஆட்டோகாரன்
கோதாவரி ஆரம்பிக்கும் இடம் -அது தான் லக்ஷ்மணன் சூற்பனகையின் மூக்கை அறுத்து போட்ட இடமாம்.
ஹிந்தியில் முக்குக்கு நாக் என்று சொல்லுவார்கள் அதனால் தான் நாசிக் என்று அந்த ஊர் அழைக்கபடுகிறதாம்.
அது ஆரம்பிக்கும் இடத்தில உள்ள ஒரு சிவசக்தி சிலை,ஒரு கோதாவரி அம்மன் சிலை ,அதன் ஊற்று மாதிரி வடிவம்,அதன் பின்னால் உள்ள ஒரு சிவன் கோவில் என்று ஐந்து இடங்களை அந்த இடத்திலயே முடித்துவிட்டான்.அதன் பின் அடுத்த வீதியில் , ராமன் சீதையை மறித்து வைத்த குகை (இப்போது அது குகை + வீடு அந்த குகை மேலே வீடுகள் கட்டி மக்கள் குடி இருக்கிறார்கள்),5 ஆலமரம் (அந்த காலத்தில் காட்டில் அடையாளத்திற்காக ராமன் நட்ட 5 செடிகளாம்.இப்போது பெரிய ஆலமரமாய் இருக்கிறது),லக்ஸ்மன் கோவில்,கருங்கலில் கட்ட பட்ட ஒரு கோவில் என்று 9 இடங்களை முடித்து விட்டான்.இதை நான் இங்கு சொல்ல காரணம் ஒரு இடத்தில ஒரு முக்கியமான இடம் தான் இருக்க முடியும் மற்ற இடங்கள் எல்லாம் சுற்றுலா பயணிகளை அடிப்படையாக கொண்டு உருவானதாகும்.ஒரு நாளை முழவதும் கழிப்தற்காக அங்கு உள்ள சின்ன இடங்கள் எல்லாம் சும்மா ஒரு setup அவ்வளவு தான். இது இங்கு எனக்கு நிகழ்ந்த அனுவபம் அல்ல.நான் ஏற்கனவே சென்றுள்ள சோம்நாத் கோவில், கேரளா kumrakom பயணம் எல்லாம் இது போல தான்.நீங்கள் எங்காவது சென்றால் முக்கியமான இடத்தில் முடிந்த அளவு அதிக நேரம் இருக்க முயலுங்கள்.அதன் சுற்றி உள்ள சின்ன இடங்கள் ஒரு ப்ரீ போனஸ் அவ்வளவு தான்.அதை அதிகம் எதிர் பார்த்து ஏமாறதீர்கள்..

3 .நாங்கள் சென்ற சனி சிங்கப்பூர் கோவிலில் ரொம்ப கூட்டம்.நாங்கள நினைத்தோம் அது சனிகிழமை என்பதால் கூட்டம் அதிகம் என்று ஆனால் பின் அங்கே விசாரித்த போது சொன்னார்கள். அது ரொம்ப விசேசமான நாள்.அது போன்ற நாள் வருடத்தில் இரு முறை தான் வரும் என்று & எதிர் பாராமல் 14 .02 .2010 அன்று சென்று வந்த ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவில் இரண்டும் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. சில விஷயங்கள் தானாக நடக்கிறது இல்லை இல்லை அந்த ஆண்டவன் வழி படியே நடக்கிறது.காதல் தினத்தன்று நான் உணர்ந்த விஷயம் கடவுள் என்ற ஒன்று காதல் போல உணர தானே முடியும் உருவம் இல்லை.

இது தான் வாழ்கையோ

தீபாவளியோ பொங்கலோ ஒரு சராசரி நாளாகவே கழிகிறது வெளி மாநிலத்தில் வசிக்கும்
எங்களுக்கு.குஜராத்தில் இருந்ததால் பட்ட திருவிழா (Kite festival) காரணமாக இந்த பொங்கல் ஒரு விடுமுறை நாளாக கழிந்தது.பொங்கல் அன்று 5 மணி அளவில் நானும் என் ரூம் மேட் பாலாஜியும் மெயின் ரோட்டில் அருகே நடை பயணம் சென்று கொண்டிருக்கையில் சற்று தொலைவில் மேல பறந்து கொண்டிருந்த ஒரு பட்டம் கீழே வர தொடங்கியது.கீழே வந்த பட்டம் ஒரு மின் கம்பியில் மாட்டி கொண்டது.அந்த பட்டதை விட்டு கொண்டிருந்த 7வயது மதிக்கத்தக்க ஒரு பையன் ஒரு பெரிய கம்புடன் வந்து அதை எடுக்க முயன்று சிறிய போரட்டத்திருக்கு பின் அதை மின் கம்பியில் இருந்து விடுவித்தான். மெயின் ரோட்டில் விழுந்த பட்டதின் நூல் அவன் எடுப்பதற்கு முன்பே ஒரு இரு சக்கர வாகணத்தில் மாட்டிக்கொண்டது.தமிழ் பட ஹீரோ போல் அந்த பட்டதை இழுத்துக்கொண்டே போனான் இரு சக்கர வண்டிகாரன். அந்த சிறுவனின் முகத்தை ஒரு சோகம் தோற்றிக் கொண்டது.அதே சோகத்துடன் அவனை நாங்கள் கடந்து சென்று விட்டோம்.என்னுடன் இருந்த பாலாஜி சொன்னார் இதை ஏன் நீங்கள் ப்ளாக்-இல் எழுத கூடாது என்று அந்த பையனை போட்டோ எடுக்க பார்த்த பொழுது அவன் அங்கு இல்லை.நாங்கள் எங்கள் வழக்கமான தூரத்தை தொட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தோம்.
கிட்ட தட்ட அதே இடம், எங்கிருந்தோ வேறு ஒரு பட்டம் கீழே வர தொடங்கியது.அந்த பட்டம் விழுவதற்கு முன்பே அதை எடுக்க தயராக ஒரு கம்புடன் 11 வயது மதிக்கத்தக்க ஒரு பையன் காத்து இருந்தான்.
நாங்களும் சிறிது நேரம் அங்கு நின்றோம் .
அந்த பட்டமும் அவனுக்கு பெரிய சிரமம் கொடுக்காமல் குப்பை கூள செடியில் விழுந்தது.அவனும் அதை எடுத்து மகிழ்ச்சி அடைந்தான்.
நாங்கள் நினைத்தோம் " இது தான் வாழ்கையோ.. என்று. "

அவனை போட்டோ எடுத்த படியே அங்கிருந்து நகர்ந்தோம்.

ஏன் இந்த blog spot ??

என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையும் "யாரும் இல்லை சாட்சியாக மனம் தான் கேள்வியாக" என்று எனக்கு எழுந்த கேள்விகளையும் காண பதிலை என் (கேள்வி) பதில் என்ற ஒரு புதிய பிரிவில் கீழ் பதிய உள்ளேன்




சிரிப்பு பதில்:
என் நலம் விரும்பிகள் சிலர் நீ ஏன் blog spot -இல் எழுத கூடாது?? என்றனர்.
"நாம்ப வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையானு" நான் கேட்டேன்.
அதுக்கு" இல்ல இல்ல நீ ஒரு blog spot ஆரம்பித்து அதுல எழுதிட்டு உன் போட்டோவை போட்டு வச்சிரு.
பின்னாடி blog -க்கு வரவங்க பார்த்து படிச்சு தெரிஞ்சு நடந்துக்குவாங்க". என்றனர்.
அப்பறம் நான் உக்காந்து யோசித்ததன் விளைவு தான் இந்த பாதையும் பதிவும்..
வரலாறு முக்கியம் ..
சிறப்பு பதில்:
என் பார்வை... வெளிப்பாடு ..உரையாடல்..சின்ன பகிர்வு
உங்களுடன் உள்ள இடைவெளி குறைப்பதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்..
நீங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்தவுடன் "அட ஆமால்ல" என்று உங்கள் மனதில்
தோன்றினால் அதுவே அந்த பதிவின் வெற்றி தான்.

Popular Posts