நினைவு நாள் அஞ்சலி

(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி )

அறிமுகம்

என் ஆயா பெயர் சின்ன குட்டி
நான் தான் அவளின் செல்ல குட்டி

பல கார்டு என் பர்சில் இருந்தாலும் அவள்
பெயர் தான் விஸ்டிங் கார்டு - சின்ன குட்டி
பேரன் கிருஷ்ணப்பன் (செந்தில்)
என்ற அடை மொழியோடு தான்
என் வாய்மொழி தொடங்கும் எங்கள் ஊரில்

எப்பவோ விசேஷத்தில் கொடுத்த மலேசிய பிஸ்கட்டும்
என் வரவுக்காக காத்து கிடக்கும் என் ஆயாவோடு
பார்த்து பார்த்து பிஸ்கட் பதத்து போகும்
ஆனால் அவள் பாசம் மட்டும் ??

என்னை திட்டுவதாய் நினைத்து கொண்டு
"இப்படியா பண்ணுவ..நல்லா இருப்ப!அரசாள்வ! "
என்று வாய்க்கு வந்தபடி வாழ்த்துவாள்.

நடுவே சின்ன வட்ட படிகம் அதனுள்
நந்தி,சிவன் காட்சி என்ற அவள்
மோதிரத்தின் சிறப்பு என்னை ஆக்கி
இருக்கிறது பல முறை வியப்பு .



இறுதி நாட்கள்

யார் யார்க்கெல்லாம் அவள் பிறப்பிற்கான
தேதியை எண்ணி கொண்டிருந்தாளோ
அவர்களெல்லாம் இவளின் இறப்புக்கான
தேதிகளை யூகித்து கொண்டு இருந்தனர்.

தன் மார்பில் வாய் வைத்து பால் குடித்த
பிள்ளைகள் எல்லாம் தன் வாயில் பால்
ஊற்றிய போதே அவள் பாதி இறந்திருப்பாள்.

நாங்கள் எல்லாரும் நல்லா
இருக்க வேண்டி கொண்டவள்
நல்லா இறக்க நாங்கள்
எல்லாரும் வேண்டி கொண்டோம்

இரங்கற்பா

நான் உன் கடைசி காலத்துல காசி கூட்டி
போயி காட்டனுமுனு காசெல்லாம் சேத்து வெச்சேனே.
ரயில் இல்லாட்டி பீலைட்டுல போலாம்னு கனவெல்லாம்
கண்டேன - அந்த கனவெல்லாம் நிழலாக்கி நீ
இல்லைங்கிறத நிஜமாக்கி போனாயே !!

பொங்கலுக்கு முன்னால போயிட்டா
பொங்கல் கெடயாதுன்னு புள்ளைங்க போலம்புனத
பொய்யாக்க பொறுத்திருந்து பொங்கலன்று
சாயங்காலம் பொசுக்குனு போயிட்டியா ??-இல்ல

மாட்டு பொங்கல் தாண்டி மண்டைய போட்டா
மகனோட பழனி மலை பயணம் முடியாதோனு
ஒரு நாள் முன்னால உன் மூச்ச முடித்தாயா??

உன் வாயில் ஊற்றிய பாலின் மிச்சத்தை தான்
நாங்க வச்ச பொங்கல் பானையில ஊற்றினோம்.
பொங்கல் வச்ச காப்பரசி மிச்சம் தான் நாங்க
உனக்கு போட்ட வாய்க்கரசினு தெரியுமா??

தான் நெய் போட்டு கொடுத்த சத்து மாவை
திண்ற பேரன் தனக்கு நெய் பந்தம் பிடிக்கணும்னு
அவளுக்கு ஆசை - விடுப்பு முடிந்து கிளம்பும்
போது தவறாமல் கேட்பாள் "எனக்கு
எதாவதுனா வர மாட்ட இல்ல" என்று.

நான் பதில் பேசாமல் வந்ததால் வந்த சந்தேகமோ
என்னவோ பொங்கல் பார்க்க தமிழகம் வந்த என்னை
அவளை பொனமாய் பார்க்க செய்து விட்டாள்.. பாவி
அவளை பொனமாய் பார்க்க செய்து விட்டாள்..

No comments:

Post a Comment

Popular Posts