Showing posts with label பாதித்ததும் பதிந்ததும். Show all posts
Showing posts with label பாதித்ததும் பதிந்ததும். Show all posts

சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம்

எதையாவது பதிவு செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த விட்டாலும் மனதுக்கு பிடித்த குறிப்பாக பாதித்த விசயமாக தேடி கொண்டிருந்தேன்.அப்போது எப்படியோ இந்த சூர்யாவின் அகரம் அடித்தளம் (Agaram Foundation) நினைவுக்கு வர கடந்த பொங்கல் அன்று விஜய் டிவி யில் வெளியான சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம் பகுதியை இணைத்து உள்ளேன்.இது பழைய விஷயம் இருந்தாலும் ஒதுக்கிவிட மனம் இல்லை ஏன் என்றால் நான் ஒன்றும் பரபரப்பு நியூஸ் சேனல் வைத்து இருக்கவில்லை.

இதை எப்போது பார்க்கும் போதும், எனது சில அனுபவங்களை வேறு சிலரின் வார்த்தைகளில் கேட்பது போல் தோன்றும்.முகங்கள் மட்டும் தான் இங்கு மாறுகின்றன.வலிகள் அப்படியே தான் இருக்கின்றன. எனது கல்விக்கு உதவி செய்த சரஸ்வதி டீச்சர்,கண்ணம்மா டீச்சர்,கண்ணபிரான் சார்,போன்றவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

எல்லார் ரத்தமும் அயோத்தியில் ஓடட்டும் !

(நன்றி: கல்கி இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

எல்லார் ரத்தமும் அயோத்தியில் ஓடட்டும் ! 


நான் அயோத்திக்கு பத்திரிகையாளர் மாநாட்டுக்காக 27 வருடங்களுக்கு முன்னர் சென்றேன். அயோத்தி-ஃபைசாபாத் இரட்டை நகரம். ஃபைசாபாத் ரயில் நிலையத்தில் இறங்கியதுமே காவி, தாடி, சடை இருந்த நிறைய பண்டாரங்கள் சூழ்ந்துகொண்டார்கள். ( தமிழில் பண்டாரம். ஹிந்தியின் பண்டா. அதாவது பூசாரி ) ராமர் பிறந்த இடத்தைக் காட்டுவதாகச் சொல்லி கையைப் பிடித்து இழுத்து வற்புறுத்தினார்கள். நண்பர்கள் சிலர் அவர்களுடன் ராமர் பிறந்த இடத்தைக் காணச் சென்றார்கள்.
ஒவ்வொரு பண்டாரமும் தனித்தனியே காட்டியது வெவ்வேறு இடம். நம் ஊர் நடைபாதை கோவில் சைசில் இருக்கும் குட்டிக் கோவிலைக் காட்டி இதுதான் ராமர் பிறந்த இடம் என்று ஒவ்வொரு பண்டாரமும் சத்தியம் செய்து தட்சிணையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு பண்டாரம் கூட நண்பர்களை, பாபர் மசூதி இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. இதுதான் 1983ல் அயோத்தி நிலைமை. அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் எம்.பி. தொகுதியில் 80கள் வரை தொடர்ந்து ஜெயித்தவர்கள் காங்கிரசார், கம்யூனிஸ்ட்கள்.
கடவுளான ராமர் மனிதராகப் பிறந்து வாழ்ந்தது புராணங்களின்படி சுமார் எட்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு. ஆனால் அயோத்தியில் மனிதர்கள் குடியேறியே 2800 வருடங்கள்தான் ஆகின்றன. எனவே ராமர் பிறந்த இடம் இந்த அயோத்தி என்பதும், இந்த அயோத்தியில் இந்த இடத்தில்தான் என்பதும் நிரூபிக்கக் கூடிய விஷயங்களே அல்ல. முழுக்க முழுக்க நம்பிக்கை மட்டுமே சார்ந்தவை. இதைப் பற்றி எந்த நீதிபதியும் தீர்மானமாகத் தீர்ப்பு வழங்கவே முடியாது. வழங்கினாலும், அது அவர் நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டதென்றுதான் பார்க்கவேண்டும். சட்ட சாட்சியங்களுக்கு அது அப்பாற்பட்டது.
எந்தத் தொழிலில் இருப்பவர்களும் அவரரவர் நம்பிக்கைகளுடன்தான் இருக்கிறார்கள். அதில் சிலர், ஓய்வு பெற்றபிறகு ஏதேனும் ஓர் அமைப்பில் சேர்கிறார்கள். அது அவ்ர்களின் நம்பிக்கைகளின் தொடர்ச்சி. யாருக்கும் திடீரென்று 60 வது வயதில் ஒரு கொள்கைப்பிடிப்பு வந்துவிடுவதில்லை. சுமார் 25,30 வயதிலிருந்தே உருவான ஈர்ப்பு அடுத்த சில வருடங்களில் வலுவடைந்து விடுகிறது. பின்னர் சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப சிலர் நேரடி அரசியலில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரான நய்யார்தான் அயோத்தி பிரச்சினை சுதந்திர இந்தியாவில் 1949 டிசம்பரில்முற்றி வெடிக்க உதவியவர்.
அது சுதந்திரம் பெற்றபோது செய்த பிரிவினையால் உருவான ஹிந்து முஸ்லிம் கலவரங்களால் பேரிழப்புகள் ஏற்பட்ட நேரம். காந்தி ஒரு ஹிந்துமத வெறியனால் கொல்லப்பட்டு 23 மாதங்கள்தான் ஆகியிருந்தன. நேருவின் அரசு வட இந்தியாவில் தொடர்ந்து மத மோதல்கள் நிகழாமல் தடுக்கப் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருந்த நேரம்.
டிசம்பர் 23ந்தேதி மாலைத் தொழுகை முடிந்தபிறகு, நள்ளிரவு பாபர் மசூதிக்கு ஒரு கும்பல் வந்து அதன் திண்ணையில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை வைத்துவிட்டுச் சென்றது. அங்கிருந்த 12 போலீசார் அதைத் தடுக்கவில்லை. இதை மத்திய அரசுக்குத் தெரிவித்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ( கலெக்டர்) கே.கே.நய்யார், மசூதியை இழுத்துப் பூட்டி இனி அங்கே தொழுகை நடக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் அத்து மீறி வைக்கப்பட்ட சிலைகளை எடுக்கவில்லை. இது பற்றிக் கவலைப்பட்ட பிரதமர் நேரு, மாநில முதல்வர் ஜி.பி.பந்த்திடமும் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலிடமும் தன் கவலைகளைத் தெரிவித்தார்.
அப்போது நய்யார் உடனடியாக சிலைகளை அகற்றிவிட்டு அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் அது நய்யார் விரும்பிய வரலாறல்ல. பதவியை ராஜினாமா செய்துவிட்டு நய்யார் ஜனசங்கம் கட்சியில் சேர்ந்து அதன் எம்.பி.வேட்பாளராகி ஜெயித்தார். ஜனசங்கம் போலவே ஆர்.எஸ்.எஸ்சின் ஆசி பெற்ற இன்னொரு அமைப்பான விஸ்வ ஹிந்து பரீஷத்தின் பிரமுகரான பி.பி.சிங்கால் , அயோத்தி இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காவல் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றதும் ப்.ஜே.பி. ராஜய சபை எம்.பி ஆனார். இவர் சகோதரர் அசோக் சிங்கால்தான் விஸ்வ ஹிந்து பரீஷத்தின் தலைவர்.
பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம்,1940களிலிருந்து ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் சுமார் 40 வருட காலம் வெளியில் தெரியாமல் மௌனமாக இயங்கி வந்திருக்கிறது. ஆட்சி அதிகார மீடியா அமைப்புகளில் ஊடுருவியிருக்கும் அனுதாபிகளின் உதவியுடன், ஒவ்வொரு அடியாக இது எடுத்து வந்திருக்கிறது. உ.பி.மாநில ஆட்சியை பாரதிய ஜனதா பிடித்தபின்னர், பகிரங்கமாகச் செயல்பட்டு அத்வானி தலைமையில் கல்யாண்சிங், நரசிம்மராவ் உதவியுடன் மசூதியை இடித்து சிலைகளை தாங்கள் விரும்பிய இடத்திலேயே வைத்துவிட்டனர். இனி கோவில் கட்டுவதுதான் அவர்களைப் பொறுத்த மட்டில் பாக்கி இருக்கும் விஷயம்.
அதற்கு முழு நிலமும் தேவை. இப்போது அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு, மூன்றில் இரு பங்கு நிலத்தை ராமர் கோவில் ஆதரவு அமைப்புகளுக்கு சட்டப்படி அளிக்கிறது. இனி வரும் மாதங்களில் ஆர்.எஸ்.எஸ் செய்யப்போகும் பிரசாரம் என்னவாக இருக்கும் என்று எளிதாக யூகிக்கலாம். 1. நீதிமன்றமே அந்த இடம் ராமர் பிறந்த இடம்தான் என்று சொல்லிவிட்டது. 2. அங்கே இருந்த பிரும்மாண்டமான ராமர் கோவிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றம் சொலிவிட்டது. 3. எனவே மறுபடியும் பிரும்மாண்டமான ராமர் கோவிலைக் கட்ட வசதியாக தங்களுக்கு தரப்பட்ட மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து கொடுத்து, மத நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும். இதுதான் நடக்கத் தொடங்கியுள்ள, வலுவடையப்போகிற பிரசாரம்.
மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று மூன்று நீதிபதிகளில் ஒருவரான தர்மவீர் சர்மா அடித்துச் சொல்லியிருக்கிறார். மீதி இரு நீதிபதிகளும் அது ஒரு நம்பிக்கை என்று சொல்லியிருக்கிறார்கள். நீதிபதி சர்மாவோ, தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ‘ராமராகப். பிறந்தவர் ஒரு கடவுள். தெய்வாம்சம் என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது. எந்த இடத்திலும் யாரும் அதற்கு வடிவம் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது வடிவம் கொடுக்காமலே கூட வழிபட்டுக் கொள்ளலாம்’ என்று ஒரு குழப்பமான வாக்கியத்தை சொல்லிவிட்டு, மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று சொல்லிவிடுகிறார்.
இதன்படி கருணாநிதி நகரில் அய்யப்பன் கோவில் வாசலில் ஒரு வருடமாக நாற்சந்ந்தி நடைபாதையை ஆக்ரமித்து உண்டியல் சகிதம் உருவாகி வரும் கோவிலை, தப்பித்தவறி நாளைக்கு மாநகராட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இடித்தால், ஆக்ரமித்தவர் அலகாபாத் தீர்ப்பை மேற்கோள் காட்டி எங்கும் இருக்கும் தெய்வாம்சத்தைத் தான் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் நிறுவி வழிபடலாம் என்று சட்டப்படி வாதாடி, வெற்றி கூடப் பெறமுடியும்.
அனுமன் பக்தராஅன நீதிபதி சர்மா,. திருமணமாகாதவர். தன் உணவை தானே சமைத்து சாப்பிடும் ஆசாரமான பழக்கம் உடையவர். தன் நம்பிக்கைகளுக்கேற்ப அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றுதான் பார்க்க முடியும். நிலத்தை மூவருக்கும் பிரித்துத் தருவதையே அவர் ஆதரிக்கவில்லை. இன்னொரு நீதிபதி அகர்வால், முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கேனும் தரவேண்டும் என்கிறார். இன்னொரு நீதிபதியான உல்லா கான், இஸ்லாமியர். ஹிந்து நம்பிக்கைப் பிரச்சினைகளுக்குள்ளேயே தான் போக விரும்பவில்லை , இதை ஒரு சிவில் சூட்டாக மட்டுமே கருதுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தீர்ப்பில் இதர இஸ்லாமியர்களுக்கு ஒரு நீண்ட வேண்டுகோளை, முகமது நபிகள் வாழ்க்கையிலிருந்து மேற்கோளுடன் வைக்கிறார். வழக்கில் இருக்கும் பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாத பகுதி இது.
பாபர் ஹிந்துக் கோவிலை இடித்தார் என்பதற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை மட்டுமே நீதிபதி சர்மா ஆதாரம் காட்டுகிறார். பி.ஜே.பி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அளித்த அந்த அறிக்கையின் பல ஓட்டைகளை அப்போதே இதர தொல்லியல் அறிஞர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஹிந்துக்கள் மனம் புண்படும்; எனவே நீ மாட்டுக் கறி சாப்பிடவேண்டாம் என்று மகன் ஹுமாயுனுக்கு உயிலில் எழுதிய பாபர், ஹிந்துக் கோயிலை இடித்திருப்பாரா என்பதே கேள்விக்குரியதுதான். இடித்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சில விதி விலக்குகளைத் தவிர, ஒவ்வொரு மன்னனும் தன் நம்பிக்கைக்கேற்ப ஒரு மதத்தை ஆதரித்து இன்னொரு மதத்தினரை துன்புறுத்தினான் என்பதுதான் நம் முழு மன்னராட்சி வரலாறு.
கோவிலை இடித்து மசூதி கட்டுவது இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதால், கட்டப்பட்டது மசூதியே அல்ல என்று ஒரு விசித்திரமான வாதத்தையும் நீதிபதி சர்மா சொல்லுகிறார். இன்னொருத்தர் வழிபாட்டு இடத்தை இடிப்பது இஸ்லாமிய நெறிகளுக்கு மட்டும்தான் முரணானதா? ஹிந்து, கிறித்துவ, பௌத்த மதங்களெல்லாம் அதை ஆதரிக்கிறதா? ஏனென்றால் இப்போது மறுபடியும் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு, வழிபாடு நடந்து வந்த மசூதிதானே இடிக்கப்பட்டிருக்கிறது ? இது ஹிந்து மத கோட்பாட்டின்படி சரி என்று நீதிபதி சொல்வதாகப் பொருள் கொள்ளமுடியுமா? எந்த மத நெறிப்படியும் இன்னொரு மத வழிபாட்டிடத்தை இடித்தோ சிதைத்தோ தங்கள் வழிபாட்டிடத்தை கட்டக் கூடாது என்றால், இந்தியாவில் எத்தனை கோவில்கள், மசூதிகள், தேவலாயங்கள் மிஞ்சும் ?
பூரி ஜகந்நாதர் ஆலயமே பௌத்த விஹாரத்தை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று சுவாமி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். பூரியில் மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆலயங்கள் பலவும் முன்னர் பௌத்த விஹாரங்களாக இருந்தவைதான் என்பதற்கு தெளிவான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. சிருங்கேரியில் ஆதி சங்கரர் மடம் கட்டிய இடம் புத்த விஹாரத்தை இடித்துத்தான். ராஜராஜ சோழன் இலங்கையில் சிங்களர்களை வென்றதும், அங்கிருந்த புத்த விஹாரங்களை இடித்து, சைவக் கோயில்களாக மாற்றினான் என்பதும் சரித்திரம்தான். இனி பௌத்தர்கள் இயக்கம் நடத்தி இவற்றையெல்லாம் இடித்து மறுபடி பௌத்த விஹாரங்களாக ஆக்கவேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனால், சர்மாவின் முன்மாதிரித் தீர்ப்பின்படி இடிக்க ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.
இது ஒரு சிவில் வழக்கு. இந்த நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று மூன்று பேர் கோருகிறார்கள். யாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பு தரவேண்டும். இதை விட்டு விட்டு தேவையற்ற விஷயங்களுக்குள் எல்லாம் தலையை நுழைத்து, குழப்பத்தையும் தொடர்ந்து இன்னும் 50 வருடங்களுக்கு மோதலையும் உருவாக்கக்கூடிய ஆபத்தான தீர்ப்பே அலகாபாத் தீர்ப்பு.
நான் நீதிபதியாக இருந்தால், இந்த நிலம் எந்த தனியாருக்கும் தனி அமைப்புக்கும் சொந்தமானதில்லை என்பதுதான், என் தீர்ப்பாக இருக்கும். வெவ்வேறு ஆட்சிக் காலத்தில் அந்தந்த ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப வழங்கப்பட்டவற்றை, ஜனநாயக ஆட்சி பொருட்படுத்த வேண்டியதே இல்லை. மொத்த நிலமும் இன்றைய குடியரசுக்குரியது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது இந்திய அரசின் பொறுப்பு என்று தீர்ப்பளிப்பேன்.
அரசுக்கு ஆலோசனையும் சொல்லுவேன். எல்லா இந்தியர்களுக்கும் மொழி, சாதி, மதம், இனம் கடந்து பயன்படக்கூடிய பொது மருத்துவமனையை அங்கே கட்டுங்கள். எல்லார் ரத்தமும் அங்கே ஓடட்டும் — இன்னொருவருக்குப் பயனுள்ள விதத்தில், ரத்த தானமாக. அல்லது ( எனக்கு அணு குண்டில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிரச்சினைக்கு தீர்வாக), அங்கே பொக்ரான் – 3 அணுவெடிப்பு சோதனையை நடத்துங்கள். எந்த தேசபக்தரும் ஆட்சேபிக்கவே மாட்டார்கள். சோதனைக்குப் பின் ஒரு பயலும் அந்த நிலத்தின் பக்கமே போகமாட்டான். கடவுளை விட கதிர்வீச்சுக்குத்தான் அதிகம் பயப்படுவார்கள் !

(நன்றி: கல்கி இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

என்று தனியும் இந்த ஆங்கில மோகம்..

சமீபத்தில் பார்த்தவுடன் பாதித்தது...












இந்த பள்ளியிலும் தான் பேசாத இங்கிலிஷை தன் பிள்ளையாவது பேச வேண்டும் என்று ஆசை பட்டு சேர்க்கும் சில பெற்றோர் இருக்க தான் செய்வார்கள்..
SCHOOL VAN--->SHCOOL VAN

படித்ததும் பாதித்ததும் 2

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 சேவை இருக்கிறது. இதர ஆம்புலன்ஸ் சேவைகளிலிருந்து இது வேறுபட்டது. காரணம், மருத்துவமனை வரை செல்லும் முன்பாகவே முதல் உதவி கொடுத்துவிடும் வசதியும் இதில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால் உயிர் அபாயம் உள்ள நிலையில் மட்டுமே உதவ 108 உள்ளது. இதர நெருக்கடிகளுக்கு பயன்படாது.


இந்த வாரம் என் தோழி ஒருவர் சேத்துப்பட்டு ரயிலடியிலிருந்து தொலைபேசினார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன் மலத்தின் மீதே புரண்டபடி கிடக்கும் நிலையில் இருப்பதாகச் சொன்னார். 108ஐ தொடர்பு கொள்ளச் சொன்னேன். அப்போதுதான் அவர்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு வருவதில்லை என்பது தெரிந்தது.

அடுத்து என் தோழி பேன்யன் தொண்டு நிறுவனத்துக்கு தொலைபேசினார். பேன்யன் தெருவில் இருக்கும் அநாதையான மன நலம் குன்றியவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு. அதை நடத்துபவர்கள் மீடியாவில் பல முறை புகழப்பட்டு பல்வேறு விருதுகள் பெற்றிருக்கக்கூடியவர்கள்.

என் தோழிக்கு போனில் கிடைத்த பதில் இது: இப்போதெல்லாம் நாங்கள் புதிதாக யாரையும் எடுத்துக் கொள்வதில்லை.

சரி. வேறு ஏதாவது அமைப்புக்கு உங்களால் தகவல் சொல்ல முடியுமா?

அதெல்லாம் எங்களால் முடியாது. நீங்களே போலீசுக்குப் போய் சொல்லுங்கள்.

இப்போது என்ன செய்வது ?சேத்துப்பட்டு ரயிலடியில் ஒரு பிணம் கிடப்பதாகச் சொன்னால்தான் போலீஸ் வரும். அல்லது ஒருவர் குடித்துவிட்டு ரகளை செய்வதாகச் சொன்னால் வரும். அல்லது அங்கே குண்டு வைத்திருப்பதாகச் சொன்னால் வரும். இதுதான் நம் சமூக நிலை.

என் தோழி தினசரி தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்பாதையில் பயணம் செய்கிறார். ஏன் சேத்துப்பட்டு ரயிலடியில் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக, மன நலம் குன்றியவர்கள் காணப்படுகிறார்கள் என்று அவருக்கு புதிராக இருக்கிறது. அதுவும் நகர முடியாத நிலையில் இருப்பவர்கள், சுயபிரக்ஞயற்றவர்கள் எல்லாம் எப்படி சரியாக சேத்துப்பட்டு ரயிலடியைக் கண்டுபிடித்து வந்து சேருகிறார்கள் என்பது பெரும் புதிர். தங்களால் வைத்துப் பராமரிக்க முடியாதவர்களை, சமாளிக்க முடியாதவர்களை யாரேனும் இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டுப்போய் விடுகிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

படித்ததும் பாதித்ததும் 1

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)
மும்பையில் சென்ற வருடம் நவம்பரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த புல்லட் தடுப்புக் கவசம் அவரைக் காப்பாற்றவில்லை.

அவரைக் கொன்ற எட்டு புல்லட்டுகளில் மூன்று வலது நெஞ்சில் கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தவை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியிருக்கிறது. கர்காரே அணிந்திருந்த கவசம் 2004ல் மும்பை காவல் துறையால் வாங்கப்பட்ட கவசங்களில் ஒன்று.

அப்போது அந்தக் கவசங்களில் சிலவற்றை சோதித்துப்பார்க்க கோரேகானில் இருக்கும் காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சிக் களத்துக்கு அனுப்பினார்கள். சோதனையில் குண்டுகள் கவசத்தை துளைத்துவிட்டன. உடனே இது பற்றி புகார் எழுப்பப்பட்டது.

மொத்த கவசங்களையும் சப்ளை செய்யும்போது தரம் மேம்படுத்தப்படும் என்று (வியாபாரிகளால்) சொல்லப்பட்டிருப்பதால், ஆர்டரை ரத்து செய்ய வேண்டாம் என்று கோப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தரம் ‘மேம்படுத்தி’ சப்ளை செய்த கவசத்தில் ஒன்றைத்தான் கர்காரே அணிந்து கொண்டு போய் செத்தார்.

கர்காரே சாகும்போது அணிந்திருந்த கவசத்தை சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மனைவி கவிதா முன்வைத்தார். அரசிடமிருந்து பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கவிதா , அந்தக் கவசம் எங்கே என்று கேட்டு மனு செய்தார்.

இப்போது அரசு பதில் சொல்லியிருக்கிறது. கவசம் மிஸ்ஸிங்காம்.

ஏன் மிஸ்ஸிங் ? யோசியுங்கள். கவசம் கிடைத்து சோதித்தால், தரக் குறைவானது என்று தெரிந்தால், அப்போது கவசம் வாங்க அனுமதித்த தலைகளுக்கு ஆபத்து. கவசத்துக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்கிய விவரங்கள் வெளிவந்துவிடும்.

நம் சமூகத்தை மிகப் பெருமளவில் ஒவ்வொரு துறையிலும் சீரழித்துக் கொண்டிருப்பது லஞ்சம் ஊழல்தான். அது நோயல்ல; நோயின் அறிகுறிதான் என்று சொல்வதை என்னால் துளியும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. லஞ்சம் நம் தேசத்தை அழித்துக் கொண்டிருக்கும் புற்று நோய்.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

Popular Posts