அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 4 : முதலில் உதவிய எழுவர் (ஏழு பேர் )

காட்சி 19:
நாங்கள் திருப்பூர் சென்று திரு ராஜேந்திரன் மற்றும் திரு சுப்ரமணியை சந்தித்தோம். அவர்கள் இருவரும் அம்மாவை தொழில் செய்யும் படி ஊக்க படுத்தினார்கள்..குறிப்பாக ராஜேந்திரன் இந்த வேலையின் அடிப்படை பற்றி சொல்லி கொடுத்தார். அம்மாவும் இதே தொழிலை நடத்த முடிவு செய்தார் . இன்றும் செய்து கொண்டு உள்ளார்.

(இந்த முப்பது வருடத்தில் ராஜேந்திரன் அவர்கள் இந்த தொழில் இருந்து வேறு தொழிலுக்கு சென்று விட்டார். அம்மா இன்னமும் திரு.சுப்பிரமணி அவர்களிடம் தான் துணியை விற்று கொண்டு இருக்கிறார் . இதை இங்கே நான் சொல்ல காரணம் இருக்கிறது. நானும் என் தம்பியும் அந்த சுப்பிரமணி அவர்கள் நமக்கு நிறைய லாபத்தை தருவது இல்லை. நாம் வேறு இடத்தில துணியை போடலாம் என எங்கள் அறிவு வந்து விட்டதாக நினைத்த நாளில் இருந்து கூறி வருகிறோம் அப்போது எல்லாம் அம்மா சொன்ன பதில் இது ஒன்று தான். துடுப்பற்ற நிலையில் பாய்மரமாய் காற்றாய் இருந்தவர்கள் அவர்கள். எனவே அவர் தொழில் செய்யும் வரையில் , அல்லது என் காலம் வரையில் இவர்களிடம் தான் தொழில் செய்ய வேண்டும் என்பார்)

காட்சி 20:
அப்பா எல் ஐ சி பாலிசி எடுத்து ஆறு மாதத்தில் இறந்து விட்டதால் பணம் வருவதற்கு நிறைய விளக்கங்களை குடுக்க வேண்டி இருந்தது . நானும் அம்மாவும் எங்கள் வீதியில் இருந்த ஏஜென்ட் திரு தேவராஜும் அவரது மேலாளார் திரு கே.சோமசுந்தரமும் தொடர்ந்து கேட்ட எல்லா ஆவணங்களையும் கொடுத்து கொண்டு இருந்தோம். இறுதியாக அப்பாவை பரிசோதித்த டாக்டர் ஸ்ரீதர் எழுதி கொடுத்த செர்டிபிகேட் உதவியால் அந்த பணம் 30000/- வந்தது.
(அம்மா இப்போதும் என்னை டேர்ம் பிளான் எடுக்க அனுமதிப்பது இல்லை)

காட்சி 21: அப்பா இறந்த ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்தனர். தொடர்ந்து பலரும் எங்கள் வீட்டிற்க்கு வந்த வண்ணம் இருந்தனர். வருபவர்கள் எல்லாம் பிஸ்கட் பாக்கெட்டு கொண்டு வந்ததில் எங்கள் வீட்டில் 5-6 பெரிய பெட்டிகள் பிஸ்கட் சேர்ந்து இருந்தது. தீடீரென தொழில் மிக லாபகரமாக ஓடியது . வேனில் துணி ஏற்றி செல்லும் அம்மா செல்லும் அம்மா லாரியில் செல்ல தொடங்கி இருந்தார். அப்போது சென்னையில் இருந்து பத்தாவது முடித்து இருந்த எங்கள் பெரியம்மா மகன், திரு ராமு அண்ணண் அம்மாவின் உதவிக்கு வந்து இருந்தார். அவர் மிக கடுமையான உழைப்பாளி.

காட்சி 22: எங்கள் ஒன்று விட்ட பெரியப்பா திரு.முத்து கிருஷ்ணன் வந்தார். அப்போ அவர் சொன்னார். எங்கள் அப்பா ஒரு இடத்தை மதுரையில் இருக்கும் போது வாங்கியதாகவும் அதனை அவரிடம் ரூபாய் 7000-க்கு அடகு வைத்து இருப்பதாகவும் கூறினார். உடனே அவர் எனக்கு வட்டி இல்லாமல் அசலை மட்டும் தவணை முறையில் குடுத்து திருப்பி கொள்ளும் படி கூறினார். அம்மாவும் சரி என ஒத்து கொண்டார். சில மாதங்களுக்கு பின் அப்படியே அந்த நிலத்தை திருப்பி விற்று விட்டோம். அப்போ அந்த இடம் மதுரையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது. நாங்கள் விற்று ஒரு வருடத்தில் அந்த இடத்திற்கு அடுத்த வீதியில் மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் அறிவிப்பு வந்தது வேற கதை. இந்த பணத்தையும் எல் ஐ சி பணத்தையும் வைத்து தான் நாங்கள் பின் நாளில் நாங்கள் இப்ப இருக்கும் இடத்தை வாங்கினோம்.

காட்சி 23: மூன்று மாதம் முடிந்து இருந்தது, அது தேர்தல் நேரம் மே மாதம் 1991, புயலுக்கு பின் வசந்தம் வீச ஆரம்பித்து மூன்று மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் அடுத்த புயல் வீச தொடங்கியது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லமால் ஆனது. உடலில் எதோ பூச்சி கடித்து உடல் முழுவதும் தடித்து விட்டது. எந்த மருந்து கொடுத்தும் கேட்க வில்லை. எங்கள் அம்மாவை பார்க்க வந்த எல்லாரும் இந்த இரண்டு பசங்களுக்காகவாது எங்க அம்மா உயிரோடு இருக்க வேண்டும் என்று எங்கள் காசு பட பேசி சென்றனர். அப்போது தான் என் தம்பியும் என்கிட்ட நீ தான் அப்பாவுக்கு தீ வச்ச, அதுனால் தான் அப்பவால் எழுந்து வர முடியல என என்னிடம் சண்டை போட ஆரம்பத்து இருந்தான். அம்மாவுக்கு நாட்டு வைத்தியரிடம் காட்டலாம் என முடிவு செய்து புறப்பட்டு கொண்டு இருந்த போது ஒரு செய்தி வந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு இருந்தார். ஊரடங்கும் சோதனையுமாய் தமிழகம் இருந்தது. எங்கள் பயணம் கை விட பட்டது. அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் தேறி வந்து கொண்டு இருந்தார்.. அப்போதும் திரு ராமு அண்ணண் இருந்ததால் கடை நடத்துவது சிரமம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. ராமு அண்ணன் அம்மாவிற்கு ஊறுதுணையாக இருந்த படி கோபியில் தொடர்ந்து மேற்படிப்பை தொடர்வதாக இருந்தது. ஏனோ அது அவ்வாறு நடக்க வில்லை.
(ராமு அண்ணன் இப்பொ சிங்கப்பூரில் செழிப்பாக இருக்கிறார் என்றாலும் அது நடந்து இருந்தால் நிச்சயமாக கொங்கு மண்டலத்தில் ஒரு மிக பெரிய தொழில் அதிபராய் மாறி இருக்க கூடும்.)

அம்மா முழுமையாக தேறி இருந்தார். அண்ணனும் திரும்பி சென்னைக்கே புறப்பட்டு இருந்தார்.

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
10-07-2021

No comments:

Post a Comment

Popular Posts