அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 2 : அப்பா புறப்பாடு - 2

1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் நான்காவது வாரம்...

காட்சி 5 : அப்பாவிற்க்கு தீடீரென உடல் சோர்ந்து , நீரிழப்பு (dehydrate ) ஆனது. எங்களுக்கு ஏன் என்றே தெரியவில்லை தனியார் மருத்துவரிடம் அழைத்து சென்றோம் . இரண்டு நாட்கள் பிறகும் பெரிய முன்னேற்றம் இல்லை. பின்பு மருத்துவ மனையில் சேர்க்க சொன்னதால் அரச மருத்துவ மனையில் சேர்த்தோம்.. என்ன ப்ரிச்சனை என்றே தெரியவில்லை.. ஆனால் உடலில் எந்த முன்னேற்றம் இல்லை.. சொல்ல போனால் அவரால் நீரே அருந்த முடியவில்லை

காட்சி 6: அவரை அரசு மருத்துவமனையில் இருந்து , மருத்துவர் ஸ்ரீதர் அவர்களின் மருத்தவ மனைக்கு அழைத்து சென்றோம். அவரும் மருத்துவர் ரவீந்தரனும் பார்த்தார்கள். இவருக்கு நீர் ஒவ்வாமை இருக்கிறது . எப்போதேனும் நாய் கடித்ததா என்று கேட்டார்கள்.. அம்மா அப்படி ஏதும் இல்லை என்றார் ...அப்பா ஆம் என்றார் .. ஒரு முறை கடித்ததா /கீரியதா என தெரியவில்லை என்றார். சிறு ரத்தம் தான் வந்தது, விட்டு விட்டேன் என்றார்..உடனே அவரை விலங்குகள் கடித்தல் சிகிச்சையில் புகழ் பெற்ற குன்னூரில் உள்ள pasteur institute-க்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

காட்சி 7: அவரை குன்னூரில் உள்ள pasteur institute அழைத்து சென்றோம். அவரை பரிசோதித்த மருத்வர்கள் நீர் ஒவ்வாமை வந்த பிறகு காப்பற்றுவது கடினம், அதிகம் பட்சம் ஓர் நாள் உயிரோட கூடும்.. சொந்த ஊருக்குள் உடனே அழைத்து செல்லுங்கள் என்று அம்மாவிற்கு சொல்லிவிட்டார்கள்.அம்மா அழவே இல்லை. எல்லா தங்கைக்கும் ப்ரிச்சனையின் போது தோன்றும் முதல் முகம் அண்ணன்/தம்பி தான். அம்மா மதுரையில் உள்ள மாமாவிடம் கூட்டி செல்ல முடிவெடுத்தார். வாடகை காரில் மதுரை புறப்பட்டோம்.

காட்சி 8: மதுரை வழியாக சொந்த ஊருக்கு செல்கையில் மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு முறை காட்டலாம் என்றார்கள். அங்கு சென்றோம் . அங்கும் காப்பாற்ற முடியாது என்றார்கள். மருத்துவரை சந்தித்து விட்டு வெளிய விடுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த பணியாளர் சற்று இருளான இடத்தில நிறுத்தி வைத்து விட்டு 50 ரூபாய் தந்தால் தான் வெளியில் கொண்டு வந்து விடுவேன் என்று அம்மாவிடம் சொல்ல அப்பாவிற்கு கோவம் வந்து அந்த பணியாளரிடம் , உன்னை சும்மா விட மாட்டேன் , நான் உன்னை பற்றி புகார் அளிக்கிறேன் என சொல்லி கொண்டே தானே எழுந்து நடந்து வந்து விட்டார்

காட்சி 9: மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றோம். அங்கே உள் நுழைந்தவுடன் மாமாவை பார்த்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த இல்வாழ்க்கையின் நடந்த தவறுகள் அனைத்திற்கும்,பொருளிழப்பிற்கும் நானே காரணம் என்றாலும் என்னை மன்னித்து எப்படியாவது உயிரை காப்பாற்றி தரும்படி வேண்டினார். மாமா அவரை ஆறுதல் படுத்தி , நாங்கள் கோபியில் இருந்து சென்ற வாடகை காரை வாடகை மாற்றி வேறு காரை எடுத்து கொண்டு எங்களை(என்னையும் என் தம்பியையும்) மாமா வீட்டில் விட்டு விட்டு அம்மா அப்பா மாமா எல்லாரும் சித்த வைத்திய மருந்து குடுக்கலாம் என்று புறப்பட்டார்கள். அப்பா அவசர அவசரமாய் அம்மாவை பார்த்து புது செருப்பு அந்த வண்டியில் இருக்கு மறந்தரமா எடுத்துக்கோ என்றார்.

காட்சி 10: . சித்த வைத்திய வைத்திய சாலை செல்லும் வழியில் அப்பா அம்மாவிடம், எனக்கு எதுவும் ஆகிவிட்டால்..பிள்ளைகளை நல்லா படிக்க வச்சிரு..யாரு வீட்டுலையும் விட்டு விடாத என்றாராம்.

காட்சி 11: சித்த வைத்திய வைத்திய சாலையில் மருந்தை அரைத்து கொண்டு இருந்தார்களாம்.. அப்பா மாமாவிடம் எங்க பங்காளிகள் எல்லாம் எங்கள் குல தெய்வத்துக்கு கிடாரி வெட்டாமல் இருக்கிறார்கள் நீங்கள் வெட்ட வைப்பீர்களா சத்தியம் செய்யுங்கள் என்றாராம். உங்க பங்களிக்காக நான் சத்தியம் செய்ய முடியாது நான் முயற்சி செய்கிறேன் என்றாராம். மருந்து தயார் ஆகி , மருந்தோடு சேர்த்து சிறு உணவை வாயில் அம்மா வைக்கையில் அப்பா காற்றில் கரைந்து இருந்தார்..

அப்பா இறந்து விட்டார் என அங்கு இருந்த எல்லாரும் சொன்னார்களாம்....

அம்மா அழவே இல்லையாம்... உடனடியாக அங்கே வாசலில் இருந்த கார் ஓட்டுநரை மட்டும் திரும்பி பார்த்தாராம்..

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
26-06-2021

(குறிப்பு : நான் சிக்கனமாக இருக்க , கணக்கு பாடத்தில் சற்று ஆர்வமாகவும் சற்று புலமையுடனும் அதிகமாக இருக்க அவர்(அப்பா) தான் காரணம் என்று அவரிடம் சொல்ல எனக்கு வாய்ப்பே இருக்க வில்லை. ஒரு வாரமோ , பல வருடமோ , என்னை போலவே யாருக்கும் அப்பாக்கள் திடீரெனெ இல்லாமல் போக கூடும். அதற்கு முன் அவரிடம் பேசுங்கள்/அவர் உங்களுக்கு கற்று கொடுத்ததை அவரிடம் சொல்லி சிலாகியுங்கள்/ உங்கள் குழந்தைகளை தினமும் தொலைபேசி வழியேனும் பேச வையுங்கள்.

No comments:

Post a Comment

Popular Posts